சனி, 12 செப்டம்பர், 2015

கடலை மிட்டாயும் ஹார்லிக்சும்


              பள்ளியில் படிக்கும் போது அரையாண்டு காலாண்டு முழு ஆண்டு தேர்வு விடுமுறை தினங்கள் எனது பெரிய மாமா வீட்டிலேயே கழிந்தது. அவரது வீட்டுக்கு அருகில் கடலை மிட்டாய் தயார் செய்யும் சிறு வீடு இருந்தது. ஓட்டு வீட்டுக்குள் வைத்து மிகச் சுவையான கடலை மிட்டாய்களை தயாரித்துக் கொண்டு இருப்பார்கள்.

"ஓட்டு வீட்டுல தான செய்றாங்க, பின்ன ஏன் குடிசைத் தொழில்னு போட்டுருக்காங்க!!"

என அந்த மிட்டாய் மேல் இருக்கும் பெயர் காகிதத்தை பார்த்து மாமாவிடம் கேட்பேன். அவர் பதில் சொன்னதாக நினைவில்லை.




              கடலையை வறுத்து, சர்க்கரை பாகுடன் கலந்து அவர்கள் தயாரிக்கையில் வரும் மணம், அதை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. மூக்கில் மணம் வீசும் போதே நாக்கில் நீர் சுரக்கத் துவங்கிவிடும். மாமா இல்லாத நேரங்களில் அத்தையை சரி செய்து வைத்துக் கொண்டு வேணுமட்டும் தின்றிருக்கிறேன்.

              ஓடி ஆடி விளையாடும் போதும் கால் சட்டை பைக்குள் ரெண்டு கடலை மிட்டாய்எப்போதும் இருக்கும். கால்சட்டை பை காலியாகும் போது மீண்டும் வீட்டுக்கு ஓடி வந்து பையை நிறைத்து விட்டு விளையாட ஓடுவேன்.

"டேய் டவுசர் பிசுபிசுப்பாக போதுடா, எறும்பு கடிக்க போது பாரு!!"
என அத்தை கத்துவார்கள்.


அப்பாவின் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது நிறைய உறவினர்கள் ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கி வந்து கொடுத்து பார்த்து செல்வார்கள். அம்மா, அப்பாவுக்கு மட்டும் அதை பாலில் கலந்து கொடுப்பார்.

"அம்மா எனக்கும்மா!!"
எனக் கேட்டால்,

"அது ஒடம்பு சரியில்லாதவங்க சாப்புடுறது. நீலாம் சாப்புட கூடாது"
என தவிர்ப்பார்.

ஆனால் இப்போது விளம்பரங்கள்

" இன்னைக்கு உங்க குழந்தைக்கு ஹார்லிக்ஸ் குடுத்தீங்களா?"
எனக் கேட்கின்றன.

             எதற்கோ பயன்பட்ட ஒன்று இன்று வேறு ஏதோ ஆகி நிற்கிறது. இந்த மாதிரி விளம்பரங்கள் குறிப்பாக படித்த பெற்றோர்களை நிறையவே சம்பாதித்து வைத்திருக்கிறது.

"இதை சாப்பிட்டால் குழந்தைகள் வேகமாக வளர்வார்கள்"
என விளம்பரம் ஒலிக்கும் போது நண்பருடைய அப்பா,

"எதுக்குடா குழந்தைங்க வேகமா வளரனும்!!! பரண் மேல இருக்குற சாமான்கள ஸ்டூல் போடாம எடுக்கவா??
குழந்தைங்க குழந்தையாவே இருக்கட்டுமே!!"
என நையாண்டி செய்து சிரித்தார்.

              அவரது பேச்சில் அர்த்தம் பொதிந்துள்ளதை உணர்கிறேன். புத்திக் கூர்மை எனச் சொல்லும் இடங்களிலும் கூட குழந்தைகள் மனப்பாடம் செய்வதை பரப்புகிற தோணியுமே தெரிகிறது. இங்குள்ள குழந்தைகள் புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்து படிப்பது யாருக்கு பலன்? என ஆயிரம் அரசியல் கேள்விகளும் எழாமல் இல்லை.


              விளையாடும் குழந்தைகளுக்கு கடலை மிட்டாயில் உள்ள கடலை பருப்பின் ஊட்ட சத்தும் சர்க்கரையின் குளுக்கோசும் கிடைக்கிறது. தனியாக எதற்கு ஒரு குளுக்கோஸ் டப்பாவும் ஹெல்த் ட்ரிங்கும் என்பது தான் நமக்குள் எழ வேண்டிய கேள்வி.


              உங்க குழந்தைகளுக்கு என்னைக்காவது கடலை மிட்டாய் வாங்கி கொடுத்துருக்கீங்களா!!?
-பாடுவாசி
01-09-2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக