சனி, 19 ஜனவரி, 2019

வைகை நதி நாகரிகம் – நூல் பார்வை



        கீழடி – இந்த ஐந்து ஆண்டுகளில் தவிர்க்க முடியாத சொல்லாக இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் தொல்லியல்துறையில் மறுக்க முடியாத, மறக்க முடியாத சொல்லாக இருக்க போகிறது. கீழடி தனக்குள் புதைத்து வைத்திருந்த வரலாற்று புதையல்களின் வீரியமே அதற்கான முக்கிய காரணம். இன்று வரை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வின் படிப்பினையில், கீழடியும் ஆதே சூழலுக்கு ஆட்பட்டுவிடும் என்கிற முன்னெச்சரிக்கையும் தொல்லியல் வரலாற்று ஆர்வளர்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

          
          கீழடி அகழாய்வு குறித்த தகவல்களும் செய்திகளும் மிக பரவலானதற்கு மதுரை மக்களும் முக்கிய காரணம் என்பதை தவிர்க்க முடியாது. காலம் காலமாக குழந்தைக்கு சோறூட்டுவதில் இருந்து தூங்க வைக்கிற வரை தாலாட்டுக்கு இணையாக கதை சொல்லுதலை காணலாம். அப்படியாக சொல்லப்படுகிற நாட்டார் கதைகளில் உள்ள வரலாற்றையும் அதன் கதை மாந்தர்களையும் இங்கே அநேகம் அறிந்துள்ளனர். சிலப்பதிகாரத்தை வாசித்தே இராதவனுக்கும் இங்கு சிலப்பதிகாரத்தின் கதை தெரியும். அதுவும் போக திருமலைநாயக்கர் அரண்மனையும் மீனாட்சியம்மன் கோயிலும் பத்துத்தூணும் விளக்குத்தூணும் மிஞ்சி நிற்கும் கோட்டையும் எஞ்சி நீண்ட மைய வீதிகளும் மதுரைக்குள் வாழும் நுழையும் யாவரையும் கால இயந்திரத்திற்குள் ஏற்றி வரலாற்று காலத்திற்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. அதன் நீட்சியாக பசுமைநடை போன்ற வரலாற்று தொல்லியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 மாதங்களாக தொடர்ச்சியான ஆதரவு இம்மக்களிடம் இருந்து கிடைத்துவருகிறது.