சனி, 19 ஜனவரி, 2019

வைகை நதி நாகரிகம் – நூல் பார்வை



        கீழடி – இந்த ஐந்து ஆண்டுகளில் தவிர்க்க முடியாத சொல்லாக இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் தொல்லியல்துறையில் மறுக்க முடியாத, மறக்க முடியாத சொல்லாக இருக்க போகிறது. கீழடி தனக்குள் புதைத்து வைத்திருந்த வரலாற்று புதையல்களின் வீரியமே அதற்கான முக்கிய காரணம். இன்று வரை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வின் படிப்பினையில், கீழடியும் ஆதே சூழலுக்கு ஆட்பட்டுவிடும் என்கிற முன்னெச்சரிக்கையும் தொல்லியல் வரலாற்று ஆர்வளர்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

          
          கீழடி அகழாய்வு குறித்த தகவல்களும் செய்திகளும் மிக பரவலானதற்கு மதுரை மக்களும் முக்கிய காரணம் என்பதை தவிர்க்க முடியாது. காலம் காலமாக குழந்தைக்கு சோறூட்டுவதில் இருந்து தூங்க வைக்கிற வரை தாலாட்டுக்கு இணையாக கதை சொல்லுதலை காணலாம். அப்படியாக சொல்லப்படுகிற நாட்டார் கதைகளில் உள்ள வரலாற்றையும் அதன் கதை மாந்தர்களையும் இங்கே அநேகம் அறிந்துள்ளனர். சிலப்பதிகாரத்தை வாசித்தே இராதவனுக்கும் இங்கு சிலப்பதிகாரத்தின் கதை தெரியும். அதுவும் போக திருமலைநாயக்கர் அரண்மனையும் மீனாட்சியம்மன் கோயிலும் பத்துத்தூணும் விளக்குத்தூணும் மிஞ்சி நிற்கும் கோட்டையும் எஞ்சி நீண்ட மைய வீதிகளும் மதுரைக்குள் வாழும் நுழையும் யாவரையும் கால இயந்திரத்திற்குள் ஏற்றி வரலாற்று காலத்திற்குள் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. அதன் நீட்சியாக பசுமைநடை போன்ற வரலாற்று தொல்லியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 மாதங்களாக தொடர்ச்சியான ஆதரவு இம்மக்களிடம் இருந்து கிடைத்துவருகிறது.



          தற்சமயம் மதுரை என குறிப்பிட இயலாத, சிவகங்கை மாவட்டத்திற்குள் நிகிழ்ந்த கீழடி அகழாய்வினை வரலாற்றின் பக்கங்களில் எழுத்துகளாகவும் புகைப்படங்களாகவும் ஓவியமாகவும் காணொளி காட்சிகளாகவும் உரைகளாகவும் ஆவணப்படுத்தியுள்ள ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் வரலாற்று கதை மாந்தர்களாக உருமாறுவர். அப்படியான சரியான முயற்சிதான் “வைகை நதி நாகரிகம்” எனும் நூல்.


          கீழடியின் தொன்மையை அகழாய்வு புனைவு மற்றும் அரசியல் பார்வையின் வழியாக அனுகியுள்ளார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். ஆனந்த விகடனில் தொடராக வந்திருந்த போதிலும் சில வாரங்களில் தவறவிட்ட பகுதிகளையும் சோ்த்து நூலாக வாசிக்கும் போது ஏற்படுகிற உணர்வு வேறு வகையானது. 2019 துவங்கிய இரவில் வாங்கி, இந்த ஆண்டு முதலில் வாசித்து முடித்த நூலாக எனது அலமாரியில் ஆவணமாகவுள்ளது “வைகை நதி நாகரிகம்”.

  
          கீழடி முதல் மூன்று கட்டங்களாக மத்திய அரசு தொல்லியல்துறையாலும் நான்காவது கட்டமாக தமிழ்நாடு மாநில தொல்லியல்துறையாலும் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட பணிகளின் போதும் சமீபத்தில் மாநில அரசு நிகழ்த்திய அகழாய்வின் போதும் பசுமைநடை மூலமாக பலமுறை கீழடி பயணப்பட்டாயிற்று. தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம், பேராசிரியர் சுந்தர்காளி, ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் ஆசைத்தம்பி போன்றோரின் கீழடி குறித்த உரைகளையும் கேட்டாயிற்று. அதன் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்னும் இன்னும் என மனம் கேட்க, “வைகை நதி நாகரிகம்” நூலை கையில் பிடித்துவிட்டு உட்கார்ந்துவிட்டேன்.


          கீழடி அகழாய்வுக்கு முன் அகழாய்வுக்களம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு வைகையின் இரு கரைகளிலும் ஆய்வு செய்துள்ளது. வைகை உருவாகும் வெள்ளி மலையில் இருந்து ராமநாதபுரம் அழகன்குளம் வரை 350 கிராமங்களில் கள ஆய்வு செய்துள்ளது. 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் இருந்துள்ளது. இதனை நூலில் குறிப்பிட்டுள்ளார். அமர்நாத் ராமகிருஷ்ணனும் கூட இதனை தமிழக தொல்லியல் கழக மாநாடுகளின் உரையில் விளக்கியுள்ளார். “வைகை நதி நாகரிகம்” என்கிற சொல்லாடல் எவ்வளவு பொருத்தமானது என்பதை உணரமுடிகிறது.


          தேனூரில் கிடைத்த கோதைஎன்று, 2100 ஆண்டுக்கு முந்தைய பிராமி எழுத்து பொரித்த ஏழு தங்கக்கட்டிகள் குறித்து எழுதத் துவங்கிய சு.வெங்கடேசன், கடை சிலம்பு ஏந்தல் என்பதே கடச்சனேந்தல் ஆனது என்கிற வாய்மொழி கதையையும் புனைவுகள் கலந்து மெல்ல பருகக் கொடுக்கிறார். அந்தனேரி பெயர்க்காரணமும் சிலப்பதிகார கதையாடல்கள் வழியாக புனைவின் வழி உணரவைக்க முயல்கிறார். சில வரலாற்று தகவல்களை புனைவுகளின் வழியாக கேட்கையில் பாட்டியிடம் கதை கேட்கிற உணர்வு எழுகிறது. புலிமான் கொம்பையில் உள்ள அந்துவன் எனும் வீரனின் நடுகல்லும் வேம்பூரில் உள்ள குத்துக்கல் (Menhirs) வரிசைகளின் தகவல்கள் இதுவரை அந்த இடத்தை காணாமல் தவறவிட்டதை குறித்த குற்ற உணர்ச்சியை மேல் எழுப்புகிறது.


          அந்த வரிசையில் அழகன்குளமும் பட்டியலில் சோ்ந்துள்ளது. அழகன்குளத்தை குறித்து பல்வேறு தகவல்களை கிரேக்க ரோம் நாடுகளோடு அங்கு கிடைத்துள்ள தொல்லெச்சங்களோடு ஒப்பிடுகிறார். அழகன்குளம் ஒரு பழமையான துறைமுகம். அங்கு ரோமானிய கப்பல்கள் வணிகத்திற்காக வந்து நின்றதை ஒரு பானை ஓட்டில் வரையப்பட்ட ரோமானிய கப்பலின்  கோட்டோவித்தை வைத்து புனைவுகளுக்குள் நுழைந்து வருகிறார். அதே போல எகிப்தின் தொல் துறைமுகங்களான க்வெசிர்அல்கதிம், பெரெனிகா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் இருந்த தூய தமிழ்பெயர்கள் பிராமி எழுத்துகளில் கிடைத்திருப்பதை ஒப்பிடுகிறார். இப்படியாக வைகைநதியின் கரைகளை மட்டும் பதிவிடாமல், முசிறி, கொற்கை,பூம்புகார் போன்ற சமகாலத்தைய துறைமுகங்களையும் துணைவைத்து நிறுவ முயல்கிறார். முல்லைப்பாட்டு ஆசிரியர், யவனர்கள் (ரோமானியர்கள், கிரேக்கர்கள்) பாண்டிய மன்னனின் பாசறையில் இருந்ததை குறிப்பிடுவதை ஆதாரம் சோ்க்கிறார். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் யவனப் பெண்மை மனைவியாக்கிக் கொண்டதாக சங்க இலக்கியம் குறிப்பிடுவதையும் தமிழர்களின் கடல் வழி உறவுகளுக்கு ஆதாரமாக்குகிறார். கிளியோபாட்ரா பயன்படுத்திய முத்துகள் துவங்கி, அலெக்ஸாண்டர் குறித்த குறிப்புகள் வரை தமிழக தொல்துறைமுகங்களின் கடல் வழி வணிக நிகழ்வுகளுக்கு வளு சோ்க்கிறார்.


          இருப்பினும் தொடர்ச்சியான புனைவுகளின் வழியான பெருமை சூடல்கள் மட்டுமே வாசிப்போருக்கு அயர்ச்சியை உண்டாக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழக அரசு தொல்லியல்துறையின் அகழாய்வுகளை குறித்து பதிவு செய்யவில்லை என்பது ஏமாற்றம்தான். கோவலன் பொட்டல் அகழாய்வு வைகையில் இருந்து சற்று தள்ள இருந்திருக்கிறதால் கணக்கில் கொள்ளவில்லை என கூறலாம். கடச்சனேந்தல், அந்தனேரி, கிடாரிப்பட்டி பொன் வணிகன் குறிப்புகளும் வைகைக் கரையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவுகளிலே உள்ளதை நினைவில் வைத்திருப்பார்கள் என நினைக்கிறோம். மதுரை பெயர் பொரித்த பிராமி கல்வெட்டு உள்ள கல்யாணிப்பட்டி சித்தர் மலை வைகை கரையிலேயே இருப்பதையும் நூல்  ஆசிரியருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.


          மற்றபடி இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்திய சு.வெங்கடேசனுடைய, நாளிதழ் வாராஇதழ்களின் கட்டுரைகள்  இந்த நூலில் பின்னிணைப்பாக உள்ளது முக்கியமான வரலாற்று பதிவு. சிந்து சமவெளி நாகரிகம் அளவிற்கு வைகை நதி நாகரிகம் வரலாற்றில் பேசப்பட இன்னும் கூட காத்திரமான பல பதிவுகள் வர வேண்டியுள்ளது.
-
சு.ரகுநாத்
paaduvaasi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக