அப்பா. இந்த சொல்லை
உச்சரிக்கும் போதே பாசமான உணர்வினை அனுபவிப்பதை உணர்கிறேன். வாழும் கணம் வரை இந்த சொல்
அந்த உணர்வினை கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். என் அப்பா எனக்காக இதை செய்தார், அதை
செய்தார், இங்கே கூட்டிச் சென்றார், அங்கே கூட்டிச் சென்றார், இதை வாங்கிக் கொடுத்தார்,
அதை வாங்கிக் கொடுத்தார் என எதையும் என்னால் சொல்ல இயலாது. ஏனென்றால் இதில் எதையும்
அவர் செய்ததில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு வாய்க்கவில்லை. எனக்கு விவரம் தெரிய
ஆரம்பிக்கும் போது இரவில் பணி முடித்து வரும் போது காரச் சேவு, பக்கோடா ஏதாவது வாங்கிவருவார்.
பாதி உறக்கத்தில் எழுந்து அமர்ந்து அவற்றை தின்று விட்டு காலையில் எழுந்து “அப்பா திங்க
என்ன வாங்கீட்டு வந்தீங்க?” என கேட்பேன். அவர் எனக்காக வாங்கிக் கொடுத்தது என்று என்
நினைவில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் இதை சொல்லலாம். கூட்டி சென்ற இடம் என்றால்,
முடி வெட்டுவதற்கு ஊத்துக்கு (ஊற்று) கூட்டிச் சென்று அங்கு குளித்துவிட்டு வருவோம்.
குண்டாற்றின் கரையில் சாதிக்காக ஏற்படுத்தப்பட்ட குளிக்கும் இடம் அது.
ஒன்றாம் வகுப்பு படித்துக்
கொண்டிருக்கும் போது என்னை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதோடு முடிந்துவிட்டது அவரது நடமாட்டம். எனக்கு நன்றாக நினைவுள்ளது, அவருக்கு சாதாரண
காய்ச்சல் தான். அப்பாவினுடைய அம்மா இருக்கும் வரை அவருக்கு கைவைத்தியம் தான் என சொல்வார்கள்.
என் அம்மா சற்று அதீத அக்கறையுடன் ஆங்கில மருந்துக்கு மாற்றினார் அப்பாவை. திருமங்கலத்தின்
அப்போதைய மிகப் பிரபலமான மருத்துவர் நடராச ரத்தினம். அவரிடன் ஆலோசனையின் பெயரில் அதிக
வீரியமான (Heavy Dosh) மருந்தை உட்கொண்டார் அப்பா. அதன் விளைவு,
அப்பாவிற்கு மூளைக்
காய்ச்சலும், நரம்பு தளர்ச்சியுமாக பீடித்துக் கொண்டது. ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டு
திரும்பினேன். நரம்பு தளர்ச்சியால் நடக்க இயலாமல் கீழே விழுந்து கண் பட்டையில் அடிபட்டு
மயங்கிய அப்பாவை மதுரையில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதாக கூறினார்கள். பல மாதங்கள்
மருத்துவமனையில் இருந்தார். அத்தையின் (அப்பாவின் தங்கை) அரவணைப்பில் நானும் அக்காவும்
இருந்தோம். சனி ஞாயிறுகளில் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க மதுரை கீழவாசலில் இருந்த
எங்கள் குடும்ப மருத்துவருடைய காசி கிளினிக்கிற்கு செல்வோம். அப்பாவால் எங்களை தெளிவாக
பார்க்க இயலாது.
“அப்பா எப்பமா பேசுவாரு”
என அம்மாவின் மடியில் தலை வைத்து கேட்கும் கேள்விக்கு அம்மாவிடம் பதில்கள் இருக்காது,
அவருக்கு பதில் தெரிந்தால்தானே சொல்வார். பிறகு சில மாதங்களில் அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார்.
இருந்தாலும் அவரால் நடக்க இயலாமலே போனது. பேசுவார், ஆனால் காது கேட்காமல் போனது. சப்தமாக
பேசினாலும் சில நேரங்களில் சம்பந்தம் இல்லாத பதில்களை தருவார்.
உறவினர் ஒருவர் ஹோமியோபதி மருத்துவராக இருந்தார்
அவரிடம் அப்பாவின் நிலையை விளக்கிய உடன், அவர் முன்வந்து மாதம் மாதம் மருந்து மாத்திரைகளை
தானமாக தரத் துவங்கினார். அந்த ஹோமியோபதி மருத்துவம் எனது அப்பாவை சுயநினைவிற்கும்,
காது கேட்கும் திறனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வழிகொடுத்தது. ஆனால் அவரால் எழுந்து நடமாட
முடியவில்லை. ஒரு காலத்தில் அந்த உறவினரும் இறந்து போனார். அதன் பிறகு ஹோமியோபதி மருத்துவராக
இருந்த அவரது மகன் உதவத் துவங்கினார். உறவினரிடம் உதவி வாங்கிய எங்களால் அவரது மகனிடம்
இலவசமாக மருந்தினை வாங்குவது தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் அந்த மருத்துவத்தையும்
கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் துவங்கினோம். அப்பாவின் நிலை பின்னோக்கி செல்லத் துவங்கியது.
கிட்டத்தட்ட பன்னிரண்டு அண்டு காலம் இப்படியாகவே கடந்தது.
நான் பன்னிரண்டாம்
வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு படிப்பு கொஞ்சம் சுமார்தான். அதனால் பள்ளியில்
ஏற்பாடு செய்திருந்த இரவு படிப்பினை (Night Study) முடித்துவிட்டு (12-11-2002) இரவு
வீட்டிற்கு வந்தேன். வீட்டின் வாசலில் நான்கு ஐந்து பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
வீட்டினுள் அம்மாவும் அத்தையும் கண்ணை கசக்கிக் கொண்டு அப்பாவின் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தார்கள்.
அக்கா உள்வீட்டிற்குள் அழுது கொண்டிருந்தார். அப்பாவின் மூச்சி மேலும் கீழுமாக இழுத்துக்
கொண்டிருந்தது. என்னை பார்த்ததும் அம்மாவின் குரல் தழுதழுத்து கதறத் துவங்கியது.
சுற்றி இருந்தவர்கள் எனக்காக காத்திருந்தது போல.
“வாப்பா, அப்பாக்கு கொஞ்சம் பால் ஊட்டுப்பா..” என்றனர்.
பால் ஊட்டினால் நிச்சயம் அப்பா நம்மோடு இருக்கமாட்டார்
என தவிர்த்தேன். எனது பேச்சையும் எனக்குள் இருந்த அழுகையையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
“அப்பா பாவம்ப்பா. இதுக்கு மேல அவர் கஷ்டப்பட வேணாம்ப்பா..
பாவம்ல!!” என என்னை கரைக்கத் துவங்கினர். நடுங்கிய கையோடு பால் சொம்பை பிடித்து அப்பாவிற்கு
இறுதி ஆகாரத்தை ஊட்டினேன். அப்பாவின் கண்கள் என்னிடம் ஏதோ சொல்ல துடித்தன. எப்படியும்
சில நொடிகளில் உயிர் பிரியும் என உணர்ந்தேன். அதனை காணும் சக்தி எனக்கில்லை. வீட்டின்
ஒரு மூலையில் போய் அமர்ந்து குனிந்து கொண்டேன். சிறுது நேரத்தில் அம்மாவும் அத்தையும்
கதறும் குரல் செவியுள் நுழைந்தது. அந்த சப்தம் மனதுள் இனம் புரியாத பாரத்தினை கொண்டு
வந்து இறக்கியது. செவிகளை இறுக மூடிக் கொண்டேன் ஆனால் மனதின் வலி தொண்டையின் வழியாக
அழுகையாகக் கிளம்பியது. அதை எதனைக் கொண்டும் அடக்க இயலவில்லை.
எனது பள்ளிப்படிப்புக்
காலங்கள் முழுதும் நடமாட இயலாமல் இருந்தாலும் என்னோடே இருந்தவர். என்னை இது வரை
எந்த சுடு சொல்லும் சொல்லியதில்லை அவர். “என்னப்பா.. வாப்பா.. போப்பா..” என அவருடைய
அப்பாவிற்கு பிறகு என்னையே அப்பா என அழைத்தார். மிக மரியாதையானவர். யாரையும் மரியாதை
குறைவாக பேசியதில்லை. குடும்பம் தவிர்த்தும் யாருக்கும் எந்த உதவியும் ஓடோடிச் சென்று
செய்துள்ளார். நாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் பல பணம் படைத்த முக்கியஸ்தர்கள் எனது
அப்பாவை அவர்களது சொந்த வேலைகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்பா இறந்த சில
காலங்கள் அம்மா இதை சொல்லியே அழுவார்.
“எவென் எவென் அள்ளிக்குடுத்த அழுக்கு உருப்படியெல்லாம்
தூக்கி சொமந்தாரு, அவரு பிள்ளைகளுக்கு அதுல கொஞ்சம் கூட பண்ணாம போய்ட்டாரு” என.
சும்மாவே எங்கள் சாதியில்
இளைச்சவன் எவனோ அவனெ இளிச்சவாயன். காசு பணம் படைத்துவிட்டால் இந்த சாதியிலேயே அவன்
உயர்ந்த சாதி. மற்றவனெல்லாம் அவனுக்கு கீழ் என்றுதான் வைத்திருப்பார்கள். என் அப்பாவை
பயன்படுத்திய யாரும் அவர் படுக்கையாக கிடந்த போதும் உதவ வரவில்லை, அவர் இறந்த பின்பும்
என்ன செய்கிறோம் என எட்டிபார்த்ததில்லை. அவர்களுக்கு கிடைத்த அடுத்த ஆளைக் கொண்டு அவர்களுக்கான
வேலைகளை செய்ய துவங்கியிருந்தார்கள்.
அப்பாவை காப்பாற்றி
வைத்திருந்த ஹோமியோபதி மருத்துவத்தின் மேல் இன்றும் தனி மரியாதை இருக்கிறது. சின்னச்
சின்ன மாத்திரை உருண்டைகளை பார்க்கும் போதெல்லாம், “அப்பா, மாத்திரை எடுத்து குடுப்பா!”
என அப்பா கேட்பதும், கொடுக்கும் மாத்திரைகளை அகண்ட அவருடைய கைகளை நீட்டி வாங்கி வாயில்
போட்டுக் கொள்வதும் நினைவுக்கு வரும்.
குலதெய்வ வழிபாட்டை
விரும்புபவர். சில நேரங்களில் படுத்துக் கொண்டே கை கூப்பி குல தெய்வம் பெயர் சொல்லி
கும்பிடுவார். வீட்டிற்கு உறவினர்கள் தெரிந்தவர்கள் யாரேனும் வந்தால் அக்கறையாக விசாரிப்பார்.
“அந்த காலத்துல உங்க அப்பாவும் நானும்…” என துவங்கி பல நினைவுகளை அசை போடுவார்.
பள்ளி விடுமுறை தினங்களில்
பலசரக்கு கடைகளில் வேலைக்கு சென்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவார். வருவது குறைவான வருவாயாக
இருந்தாலும் “பையன் பொருப்பா லீவு நாள்ல வேலைக்கு போறான்” என வருவோர் எல்லோரிடமும்
சொல்லி சிலாகிப்பார். நான் கல்லூரி படிப்பு முடித்து தானம் அறக்கட்டளையில் பணியில்
சேரும் போது அந்த சொற்களின் நினைவுகள் வாட்டி வதக்கியது.
அவர் இறப்பதற்கு முந்தைய
சில தினங்களில் வீட்டில் வீசிய மல நாற்றம் அவரை நினைக்கும் போதெல்லாம் மணக்கிறது. அவர்
இறந்த மறுநாள் அவரது உடலை தீக்கு இரையாக்கினேன். அடுத்த நாள் காரியத்திற்கு சென்ற போது
அவருடைய நெஞ்சி பகுதி எரியாமல் இருந்தது. அங்கிருந்த தொழிலாளர்களை எங்கள் சாதி திமிர்கள்
திட்டத் துவங்கின. “ஏன்டா என்னடா வேலை பாத்து வச்சிருக்கீங்க!!” என துவங்கி வயது வித்தியாசம்
பார்க்காமல் வார்த்தைகள் வந்து விழுந்தன. மனிதர்களை மதிக்க தெரியாத இவர்களுக்கு தெரியவதில்லை
எரியாமல் கிடப்பது எந்தையின் நெஞ்சில் இருக்கும் ஈரத்தன்மை என்று.
அன்பும் நன்றியும்
சு.ரகுநாத்
paaduvaasi@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக