வெள்ளி, 11 நவம்பர், 2016

அம்மா (அப்பாவுக்கு முன்னும் பின்னும்)

நவம்பர் 12, அப்பா இறந்த தினம். இந்த நாள் வருகிறபோதெல்லாம், அப்பாவின் மரணத் தருவாய் நினைவுகளில் வருவதைப் போலவே அம்மாவைக் குறித்தும் பல நினைவுகள் வந்து நிற்கிறது. அம்மா ஒரு கடவுள் பைத்தியம். ஒரு காலத்தில் நானும் கூட கடவுள் பைத்தியம்தான். ஆனால் அம்மா அளவிற்கு இருக்க முடியாது. செவ்வாய், வெள்ளி மறக்காமல் கோயிலுக்கு போய்விடுவார். ஏதாவது அரசு விடுமுறை தினங்களோ, பள்ளி பரிட்சை விடுமுறை தினங்களோ செவ்வாய் வெள்ளி கிழமைகளாக இருந்தால், மாரியம்மன் கோயில் பத்திரகாளியம்மன் கோயில், சமயங்களில் குமரன் கோயில், மீனாட்சியம்மன் கோயில் என ஊருக்குள் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் அழைத்து சென்றுவிடுவார். வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்து (மதியம் மட்டும் ஒரு வேளை உணவு உண்டு) கோயிலுக்கு செல்வார். எலுமிச்சை பழம், பஞ்சு திரி, நெய், சின்ன சின்ன மண் அகல் விளக்குகள் என அவருடைய கோயில் பை திருநீரும் குங்குமமும் மணந்தபடி இருக்கும். கோயில்களில் எலுமிச்சை பழத்தை வீணாக்கி, அதாவது எலுமிச்சை பழத்தை அம்மன் சிலைக்கு முன் பிளிந்து அந்த சிட்ரிக் அமிலத்தை தரையில் வட்டமாக ஈரப்படுத்தி, அதன் மேல் சின்ன கோலமிட்டு, பிளிந்த எலுமிச்சையின் தோல் பகுதியை பிரட்டிவிட்டு அதில் நெய் ஊற்றி, திரி வைத்து விளக்கு ஏற்றுவார். யாராவது புஷ்..புஷ்… என சப்தமிட்டு சாமியாட துவங்கிவிட்டால், அவர்களிடம் குறி கேட்க துவங்கிவிடுவார்.

சனி, 5 நவம்பர், 2016

குமரி நிலநீட்சி நூலும் சில தெளிவுகளும்

           ஆய்வு நூட்களை வாசிக்க இப்போதெல்லாம் ஆர்வமாக உள்ளது. வரலாற்று / பண்பாட்டு ஆய்வுகள் என்றால் கூடுதல் ஆர்வம் ஒட்டிக்கொள்கிறது. ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு நூட்களே இப்படியான ஆர்வத்தை எனக்குள் தூண்டியிருக்கிறது. பண்பாட்டு, மொழி ஆய்வு கடந்து இன்னும் முன் சென்று கடல், நிலம், மனிதகுலம் போன்றவற்றின் வரலாற்று ஆய்வுகளை வாசித்து அறிகிற வாய்ப்பு எழுத்தாளர் சு.கி.ஜெயகரன் அவர்களது “குமரி நிலநீட்சி” நூல் மூலமாகக் கிட்டியது. குமரிக்கண்டம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாசிக்கத் துவங்கினேன். எஸ்.வி.ராஜதுரை ஐயா அவர்களது முன்னுரையை வாசிக்கும் போதே, ‘இந்நூல் குமரிக்கண்டம் குறித்தான எனது பார்வையை மாற்றியமைத்துவிடுமோ!’ என அஞ்சி வாசிப்பை தவிர்த்துவிடுகிற என்கிற எண்ணம் கூட வந்துவிட்டது. நூலாசிரியர் தனது அறிமுக உரையில்

“தமிழின் தொன்மையை கற்காலத்திற்கும் முற்பட்ட காலத்திற்கும் தள்ளுவது ஏற்புடையதன்று. காலக்கணிப்பை மிகைப்படுத்துவதால் தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. வரலாற்று ஆய்வு எனும் ஒளிபுகாத காலத்திற்குத் தமிழனின் தொன்மையை கொண்டு செல்வதனாலேயே தமிழினம் பெருமையடையுமா? தொன்மையை மிகைப்படுத்துவதால், தமிழருக்கு பெருமை சேர்க்கும் பரிமாணங்கள் பற்றிய நம்பகத்தன்மை குறைந்துவிட வாய்ப்புகளுண்டு.”