சனி, 5 நவம்பர், 2016

குமரி நிலநீட்சி நூலும் சில தெளிவுகளும்

           ஆய்வு நூட்களை வாசிக்க இப்போதெல்லாம் ஆர்வமாக உள்ளது. வரலாற்று / பண்பாட்டு ஆய்வுகள் என்றால் கூடுதல் ஆர்வம் ஒட்டிக்கொள்கிறது. ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு நூட்களே இப்படியான ஆர்வத்தை எனக்குள் தூண்டியிருக்கிறது. பண்பாட்டு, மொழி ஆய்வு கடந்து இன்னும் முன் சென்று கடல், நிலம், மனிதகுலம் போன்றவற்றின் வரலாற்று ஆய்வுகளை வாசித்து அறிகிற வாய்ப்பு எழுத்தாளர் சு.கி.ஜெயகரன் அவர்களது “குமரி நிலநீட்சி” நூல் மூலமாகக் கிட்டியது. குமரிக்கண்டம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாசிக்கத் துவங்கினேன். எஸ்.வி.ராஜதுரை ஐயா அவர்களது முன்னுரையை வாசிக்கும் போதே, ‘இந்நூல் குமரிக்கண்டம் குறித்தான எனது பார்வையை மாற்றியமைத்துவிடுமோ!’ என அஞ்சி வாசிப்பை தவிர்த்துவிடுகிற என்கிற எண்ணம் கூட வந்துவிட்டது. நூலாசிரியர் தனது அறிமுக உரையில்

“தமிழின் தொன்மையை கற்காலத்திற்கும் முற்பட்ட காலத்திற்கும் தள்ளுவது ஏற்புடையதன்று. காலக்கணிப்பை மிகைப்படுத்துவதால் தேவையற்ற சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. வரலாற்று ஆய்வு எனும் ஒளிபுகாத காலத்திற்குத் தமிழனின் தொன்மையை கொண்டு செல்வதனாலேயே தமிழினம் பெருமையடையுமா? தொன்மையை மிகைப்படுத்துவதால், தமிழருக்கு பெருமை சேர்க்கும் பரிமாணங்கள் பற்றிய நம்பகத்தன்மை குறைந்துவிட வாய்ப்புகளுண்டு.”

இப்படியாக எழுதியதை வாசித்த பின்தான், மேற்கொண்டு வாசிக்க முனைந்தேன்.

          
           முதல் அத்தியாயத்தில் குமரிநிலம் குறித்த இலக்கிய குறிப்புகளை நூலசிரியர் விளக்குகிறார். சங்கப் புலவர்கள் கூறியுள்ள “நிலநீட்சி” இன்று நாம் கண்டம் என்று சொல்கிற அளவிற்கு பெரிய நிலப்பரப்பா? கண்டம் எனும் சொல் ‘நாடு’ என பொருள் கொண்டதை பிங்கல நிகண்டும், சூடாமணி நிகண்டும் குறிக்கிறது. ஏழ் தெங்கம், ஏழ் மதுரை, ஏழ் முன்பாலை, ஏழ் பின்பாலை, ஏழ் குன்றம், ஏழ் குணக்கரை, ஏழ் குறும்பனை ஆகமொத்தம் (7 x 7 = 49) 49 நாடுகள் குமரிக்கண்டத்தில் இருந்ததாக கருதப்படுகிறது. ஆனால் ஏழ் என்பது ஏழு என பொருள் குறிப்பதில்லை, ஈழம் எனும் சொல்லால் வந்தது என விளக்குகிறார். நூலின் வேறு அத்தியாயத்தில் எழு என்பதை நாகர்கள் பேசிய மொழியாக குறிப்பிடுகிறார். அதுபோக நாடு என்பது இப்போதுல்லது போல பெரிய நிலப்பரப்பாக அமைந்திருக்காமல் தற்போதைய தாலுகா அளவினை உடையதாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதையும் விளக்குகிறார். மேலும் உரைகாரர் கூற்றுப்படி, மறைந்த நிலப்பகுதியில் எழுநூறு காதம் இடைவெளியில் குமரி நதியும், பஃறுளி நதியும் ஓடியுள்ளது. இதனை மறுத்து நூலாசிரியர், கிட்டத்தட்ட ஏழாயிரம் மைல்கள் (11,200கி.மீ)  தொலைவு என்பது அண்டார்டிக்காவிற்கு உள்ள தூரத்திற்கும் (8,500கி.மீக்கும்) அதிகம் என்கிறார். இதே போல பல்வேறு இடைச் செருகல் இலக்கியங்களையும் அதனை தோலுரித்த ஆய்வாளர்களையும் அறிமுகம் செய்து கடக்கிறார்.


            நாகர்கோயிலுக்கு கிழக்கே ஓடும் பழையாறு என்பதை இப்பகுதி மக்கள் பறளியாறு எனக் கூறுவதாகவும் இதுவே கடலில் மறைந்த நிலத்தில் ஓடிய பஃறுளியாக இருக்கலாம் என கல்வெட்டு விவரங்களைத் தருகிறார். சங்கம் எனும் வடமொழிச் சொல் புத்த சமய காலத்திற்கு பிறகே தமிழில் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்ச்சங்கங்கள் என்கிற சொற்றொடர் அதன் பின்னரே தோன்றியிருக்க வேண்டும்.


           இரண்டாம் அத்தியாயத்தில் மறைந்த கண்டங்களை பற்றியும், அதன் கருத்தாக்கங்கள் எங்கே பிறந்தன என்பதையும் விளக்குகிறார். ஜெர்மனியின் ‘ஏர்ன்ஸ்ட் ஹிக்கல்’ எனும் அறிஞர் ஆரிய இனமே (வெள்ளையர் இனம்) பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த இனம் எனும் கருத்தை தன்னிச்சையாக வெளியிட்டு இனவாதத்திற்கு வலுவூட்டினார். அது போலவே இங்கும் லெமூரியா குறித்தும் அட்லாண்டிஸ் எனும் கண்டங்கள் குறித்தும் முதன்முதலில் எழுத ஆரம்பித்தவர்கள் பிரம்மஞான சபையினர்தான். அவர்கள்,

“மூல இனங்களான ஏழு இனங்களில் பரிணாம உயர்வு பெறாத மூன்றாவது மூல இனம் லெமூரியன் கண்டத்தில் இருந்தது என்றும், லெமூரியன் முட்டையிட்டு குஞ்சு பொரித்த விலங்கு என்றும், அதற்கு பின் வந்த நான்காவது இனத்திற்கு பாலுனர்வு இருந்தது என்றும், அதற்கும் அடுத்த பரிணாம வளர்ச்சி அடைந்து அட்லாண்டிஸ் கண்டத்தில் ஜனித்த இனம் ஆரிய இனமே அதுவே அனைத்திலும் உயர்ந்த இனம்"

 எனக் கூறுகின்றனர். எனவே பிரம்ம ஞான சபையினரால் எழுதப்பட்ட லெமூரிய கண்டம் இனவாதத்திற்கு வித்திடுவதற்காகவே என்பது உறுதியாகிறது.


           தமிழ்ச்சங்க காலத்தையும் லெமூரியன் கண்ட காலத்தையும் ஒப்பிடுவது கூடாது என்றும் சங்க காலம் இன்றைக்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்றும் விளக்குகிறார். ஆதேபோல கா.அப்பாதுரை அவர்களது கூற்றான டினோசர் காலத்தில் மனித உயிரினம் இருந்தது என்கிற கருத்தையும் மறுக்கிறார். டினோசர்கள் அழிந்து பல லட்ச ஆண்டுகளுக்குப் பிறகே மனித இனம் தோன்றியது என விளக்குகிறார். பல்வேறு ஆய்வாளர்களின் நூட்களையும் அவை கூறும் லெமூரியாக் கண்டம் குறித்தான கருத்துக்களையும் ஆதாரங்களோடு மறுப்பு கூறுகிற நூலாசிரியர், 1975-ல் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவினர் எழுதிய ‘தமிழ்நாட்டு வரலாறு” நுலில் கூறப்பட்டுள்ள சில உண்மைகளை விவரிக்கிறார். 
அதில் முக்கியமானது,

“லெமூரியக் கண்டம், அட்லாண்டிஸ் கண்டம், பசுபிக் கண்டம் போன்றவை அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், இலங்கை தென்னகத்துடன் இணைந்திருந்தது என்பதும் குமரி முனைக்கு தெற்கே நிலப்பரப்பு இருந்தது என்பதும் உண்மையே. இந்நிலப்பரப்பே இலக்கியங்கள் கூறும் குமரிக்கண்டமாக இருந்திருக்கலாம்.” என்பதே அது.


            மூன்றாம் அத்தியாயத்தில் பல்வேறு நிலயியல் தரவுகளைத் தருகிறார். பழம்பாறைகளை ஆராயும் போது பூமி உருவானது சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் என்பது தெரியவருகிறது. (இனி நான் பார்க்கிற மலைகளில் இருந்து மிதிக்கிற மண் வரைக்கும் வரலாறாகவே தெரியப்போகிறது.) பூமியின் விட்டமான 12600 கிமீ-யை மேல் ஓடு 30 கிமீ; இடைப்பட்ட திரவநிலையிலுள்ள மேற்புரம் 2900 கிமீ; திடநிலையிலுள்ள மேற்புரம் 2000 கிமீ; மையப்பகுதி 1370 கிமீ என்பதையும் அதனை 1914-ல் ‘பெனோ குட்டன் பெர்க்’ எனும் புவி இயல்பியலளார் கணித்த முறையையும் விளக்குகிறார். கோண்ட்வானா கண்டத்தில் 35 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெடிப்பு கண்டங்களாக பிரிந்ததையும் அந்தக் காலத்தில் மனித இனம் உருவாகவில்லை என்பதையும் இதன் மூலம் விளக்குகிறார். அதே போல ஒரே வகைத் தாவரங்கள் பல கண்டங்களில் காணப்படுவதை வைத்துப் பார்க்கையில், கண்டங்களின் பிரிவிற்கு முன்பிருந்து அவைகளுக்கான வரலாறு துவங்கிவிட்டதை அறிய முடிகிறது.
இந்தியத்தட்டு நகர்ந்து இமயமலை உருவாகிய விதத்தினை, இன்றும் இந்தியத்தட்டு யுரேசியஸ் தட்டை நோக்கி ஆண்டுக்கு 5 செ.மீ நகர்ந்து கொண்டிருப்பதை, இந்தியத் தட்டு நகர்வதால் ஆண்டுக்கு 5மிமீ எவரெஸ்ட் உயர்வதை விவரிக்கிறார்.


            கடந்த 20 லட்சம் ஆண்டுகளில் நான்கு முறை பனியுகம் ஏற்பட்டுள்ளது. இன்றிலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாக பனியுகம் நிகழ்ந்துள்ளது. பனியுகம் நிகழும் போது கடல் மட்டம் குறைந்து நிலப்பகுதி விரிவடைகிறது. இந்த பனியுகத்தை எப்படி கணிக்கிறார்கள்? பனிப்படர்வுகளின் காலத்திய நீர்நிலைகளில் படிவங்களில் மிகுதியாக படிந்த மகரந்த தூள், தொல்லுயிரெச்சங்கள் போன்றவற்றை வைத்து கணக்கிடப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் அவனியடுப்பு(பழமையான யானை இனம்), சாயர்மலை(மாட்டு இனம், மான் இனம், யானை இனம்); திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியலூர்(குதிரை இனம்), மருவத்தூர்(மாட்டு இனம்) இது போக இந்நூல் ஆசிரியர் சு.கி.ஜெயகரன் அவர்களால் 1970-களில் சாத்தான் குளத்தில் பிளைஸ்டோஷின் படிவங்களில் இருந்து காண்டாமிருகம் மற்றும் மாட்டு இனங்களின் தொல்லுயிரெச்சங்களை கண்டுபிடித்துள்ளார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பனியுகத்தில் உலகெங்கிலும் கடல் மட்டம் 120 மீ. தாழ்வாக இருந்துள்ளதை கணித்துள்ளனர். 


            இதே போல சென்னைக்கு அருகில் பல்லாவரம், வடமதுரை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் முதல்கட்டமாக இன்றில் இருந்து 50,000-70,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கரடுமுரடான கைக்கோடாரி, கிழிப்பான் போன்றவை கிடைத்துள்ளன. இரண்டாம் கட்டமாக கூராக செதுக்கப்பட்ட கல் ஆயுதங்களும், மூன்றாம் கட்டமாக ஆந்திராவில் கல் தகடுகளும், நான்காவது கட்டமாக (இன்றில் இருந்து 10,000-4,000 ஆண்டுகள்) எழும்புகளை பல் போல வரிசைப்படுத்தி, காட்டு தானியங்களை அருவடை செய்த ஆதாரங்களும், இப்படியாக ஐந்தாம் கட்டம் ஆறாம் கட்டம் என ஆய்வுகளில் கிடைத்த தொல் எச்சங்களை வரிசைப்படுத்துகிறார். இந்த அறிவியல் ஆய்வுகள் மூலமா தமிழக நாகரீக வளர்ச்சியை கணிப்பதே சரியானது, அதைவிடுத்து ஆண்டுகளை மிகைப்படுத்துவது தேவையற்றது எனக் கூறுகிறார்.


           நான்காம் அத்தியாயத்தில் பனியுகத்தினால் ஏற்படும் கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கங்களை பவளப் பறைகளைக் கோண்டு ஆய்வதை விளக்குகிறார். கடல் மட்டம் உயரும் போது பவளப்பூச்சிகளின் லார்வாக்கள் கடலில் மிதந்து வந்து பற்றிப் படர ஆரம்பிக்கின்றன. அந்த பவளப்பாறைகளின் கால அடுக்குகளைக் கொண்டு கடல்மட்ட ஆய்வுகளை மேற்கொள்வதை விவரிக்கிறார். கடலில் கப்பல்களில் எதிரொலி அலைகளை அனுப்பி அவற்றின் ஆழம் அறிந்து கொண்டு கடலுக்குள்ளான நிலப்பரப்பு குறித்தும் அறியமுடிகிறது. இப்படியான பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் குமரி நிலநீட்சி குறித்தான ஆய்வின் முடிவை ஐந்தாம் அத்தியாயத்தில் விவரிக்கிறார்.

“அன்று நிலப்பரப்பாக இருந்த இன்றைய பாக் நீரிணைப்பகுதி வடகிழக்காக 250 கிமீ நீளமும் தென்மேற்காக 150கிமீ அகலமும் கொண்டதாக இருந்தது. தென் இந்தியாவையும் இலங்கையையும் அன்று இணைத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 36,000 கிமீ. இது கணிசமான நிலப்பகுதி என்பதை கவனிக்கவும்”


            தொல்லுயிரெச்சங்கள் குறித்தான பதிவுகளை வாசிக்கும் போது நூலாசிரியரின் வீட்டில் அவர் சேகரித்திருந்த ஆவணங்கள் நினைவுக்கு வந்து சென்றன. ஆய்வாளர்களின் பெயர்கள், அவர்களது கருத்து, அதனை ஏற்கும் மறுக்கும் முறைகளால், ஒரு கருத்தை எந்த அளவீட்டில் ஏற்பது என்பதை உணர்ந்து கொள்கிறேன். புராண புரட்டுகளை போல தமிழர்களின் தொன்மம் கேலிக் கூத்தாகிவிடாமல் இருப்பதற்கு சரியான கால கணக்கீட்டையும், தொல்லியல் ஆய்வுகளின் முடிகளைக் கொண்டும் பரிசீலிப்பது அவசியமாக உணர்கிறேன். சாதி வரலாறு, மத வரலாறு, இன வரலாறு என்று மட்டும் சுற்றிக் கொண்டு இருக்காமல் கடல், நில, மனித குல வரலாறுகளை குறித்து வாசித்து பயணப்படுகையில் அறிவையும் மனசையும் விசாலப்படுத்தி பார்க்கிற எண்ணம் பிறக்கிறது. ‘குமரி நிலநீட்சி’ நூலாசிரியர் எழுத்தாளர் சு.கி.ஜெயகரன் அவர்களது வார்த்தைகளோடு நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

“இந்த புவியியல் மாற்றங்களின்  பரிணாமம், பாரிணாம மாற்றம் ஆகியவற்றை மனிதர் பல நூற்றாண்டுகளாக உணரவில்லை. இந்த நிகழ்வுகளைப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளில் கணிக்கும் போது மனிதன் தோன்றி வாழ்ந்த காலம் சில மணித்துளிகள் போலவேயாகும்.”

அன்பும் நன்றியும்
பாடுவாசி ரகுநாத்
05-11-2016
paaduvaasi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக