நவம்பர்
12, அப்பா இறந்த தினம். இந்த நாள் வருகிறபோதெல்லாம், அப்பாவின் மரணத் தருவாய் நினைவுகளில்
வருவதைப் போலவே அம்மாவைக் குறித்தும் பல நினைவுகள் வந்து நிற்கிறது. அம்மா ஒரு கடவுள்
பைத்தியம். ஒரு காலத்தில் நானும் கூட கடவுள் பைத்தியம்தான். ஆனால் அம்மா அளவிற்கு இருக்க
முடியாது. செவ்வாய், வெள்ளி மறக்காமல் கோயிலுக்கு போய்விடுவார். ஏதாவது அரசு விடுமுறை
தினங்களோ, பள்ளி பரிட்சை விடுமுறை தினங்களோ செவ்வாய் வெள்ளி கிழமைகளாக இருந்தால், மாரியம்மன்
கோயில் பத்திரகாளியம்மன் கோயில், சமயங்களில் குமரன் கோயில், மீனாட்சியம்மன் கோயில்
என ஊருக்குள் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் அழைத்து சென்றுவிடுவார். வெள்ளிக் கிழமைகளில்
விரதமிருந்து (மதியம் மட்டும் ஒரு வேளை உணவு உண்டு) கோயிலுக்கு செல்வார். எலுமிச்சை
பழம், பஞ்சு திரி, நெய், சின்ன சின்ன மண் அகல் விளக்குகள் என அவருடைய கோயில் பை திருநீரும்
குங்குமமும் மணந்தபடி இருக்கும். கோயில்களில் எலுமிச்சை பழத்தை வீணாக்கி, அதாவது எலுமிச்சை
பழத்தை அம்மன் சிலைக்கு முன் பிளிந்து அந்த சிட்ரிக் அமிலத்தை தரையில் வட்டமாக ஈரப்படுத்தி,
அதன் மேல் சின்ன கோலமிட்டு, பிளிந்த எலுமிச்சையின் தோல் பகுதியை பிரட்டிவிட்டு அதில்
நெய் ஊற்றி, திரி வைத்து விளக்கு ஏற்றுவார். யாராவது புஷ்..புஷ்… என சப்தமிட்டு சாமியாட
துவங்கிவிட்டால், அவர்களிடம் குறி கேட்க துவங்கிவிடுவார்.
இவை
எல்லாம் எதற்காக என்றால், ஆங்கில மருத்துவத்தால் நரம்பு சுண்டி நடக்க இயலாமல் போன அப்பாவிற்காகத்தான்
என்பது தனிக் கதை. இப்படி கோயில் குளம் என சுற்றும் போதெல்லாம் அம்மாவின் முகத்தை பார்த்திருக்கிறேன்.
நெற்றியில் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவத்தில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தாலும்,
குங்குமம் அதைவிட பெரிய வட்டமாக இருக்கும். அது போக முன் பக்க தலைமுடிக்குள் கொஞ்சம்
குங்குமத்தை ஒளித்துவைப்பார். அவர் அணிந்திருந்த தாலிக்கும் கொஞ்சம் குங்குமத்தை வைப்பார்.
அப்போது தான் அந்த தாலியை வெளியில் பார்க்க முடியும். கோயில் பூசாரி கொடுக்கிற, அம்மன்
சிலை மேல் கிடந்த பூவை பவ்யமாக வாங்கி தலையில் சூடிக் கொள்வார். இப்படியாக அம்மாவைப்
பார்க்கையில் பக்தியின் உச்ச நிலையில், அதென்ன!! ஆங்.. தெய்வ கடாஷ்சமாக காட்சியளிப்பார்.
இன்றும் கூட அவர் கோயிலுக்கு செல்கிறார். தெய்வ ஆரத்தி செய்த சூடத்தை.. இல்லை.. இல்லை,
இப்போதெல்லாம் நெய் விளக்கு ஆரத்தி தானே!! அதனை தொட்டு கண்களில் ஒத்திக் கொள்கிறார்.
பூசாரியோ ஐயரோ கொடுக்கிற திருநீரை எந்த கூச்சமும் இல்லாமல் வாங்கி நெற்றியில் பூசிக்
கொள்கிறார். ஆனால் குங்குமம் கொண்டு வருகிற போது மட்டும் ஏனோ பின் வாங்குகிறார். மீறி
கைக்கு வரும் குங்குமத்தை ஒரு காகிதத்தில் சிறு பொட்டலமிட்டு அவருடைய கோயில் பைக்குள்
போட்டுக் கொள்கிறார். அதனை மறந்தும் நெற்றியில் பூசிக் கொள்வதில்லை. அம்மன் சிலை சூடிய
பூவினையும் தன் தலையில் அவர் சுட்டிக் கொள்வதில்லை. குங்குமம் இட்டுக்கொள்ள அவர் கழுத்தில் தாலி இல்லை. இதையெல்லாம் வைத்து அவர்
கடவுள் நம்பிக்கையை இழந்து வருகிறார் என்று யாரும் கூறுவதில்லை. அவர் அந்த கடவுள் நம்பிக்கையை
இழக்கவும் இல்லை. அதே பய பக்தியோடுதான் இன்றும் செவ்வாய் வெள்ளி கோயிலுக்கு செல்கிறார்.
நெய் விளக்கு ஏற்றுகிறார். சிலைகளுக்கு முன் நின்று உருகி உருகி பிராத்திக்கிறார்.
இருந்தும், இந்த குங்குமமும், பூவும் இட்டுக் கொள்ளும் தகுதியை அம்மா இழக்க வைக்கப்பட்டார்.
அவர் இந்துதான். குங்குமமும் பூவும் இந்துக்களின், இந்து பெண்களின் அடையாளம் என வாய்கிழிய
பேசுபவர்களும், அதற்கு அறிவியல் விளக்கம் கொடுக்கும் நவீன இணையதள படித்த மேதாவிகளும்,
அந்த அறிவியலுக்கு முரண்பாடான செயலுக்கு இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுத்ததாக அறியவில்லை.
எந்த இந்து மதம் என் அம்மாவிற்கு இத்தனையையும் வழங்கியதோ அதே இந்து மதம் அவரிடம் இருந்து
அனைத்தையும் பரித்துக் கொண்டது.
சுடுகாட்டுக்கு
செல்லும் போது அம்மாவின் நெற்றியில் இருந்த குங்குமமும், தலையில் சூட்டியிருந்த பூவும்,
கழுத்தில் தொங்கிக் கிடந்த தாலியும், காலில் கிடந்த மெட்டி எனும் மிஞ்சி வரை சுடுகாட்டில்
இருந்து நான் வீட்டுக்கு வரும் போது இருக்கவில்லை. நல்லவேளையாக, முத்துலட்சுமி ரெட்டி
போன்ற பெண் சமூகப் போராளிகளுக்கு பின்பு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இல்லை என்றால்
அன்றே அம்மாவையும் அப்பாவோடு தீயிட்டுக் கொழுத்தி, கொலை செய்திருப்பார்கள் இந்த இந்துக்கள்.
வெள்ளைச்
சேலை அணிவது என்பதெல்லாம் வட மாநிலங்களில் இன்றும் இருந்து வரும் நிலையில், தந்தை பெரியார்
போன்றோரின் கருத்துக்களின் தாக்கம் சாமானியன் வரை சென்றுவிட்டதால் அதையெல்லாம் இந்த
காலத்தில் தமிழகப் பகுதிகளுக்குள் காணவில்லை. என் அம்மாவை தனித்த அடையாளமாக அப்படி
உருவகப்படுத்தி பார்த்திடும் நிலை நல்ல வேளை எனக்கு வாய்க்கவில்லை.
“குங்குமம்
தான் இந்து பெண்களின் அடையாளம், அதுதான் பாரம்பரியம். அதில் உள்ள விஞ்ஞான குணங்கள்
ப்ளா.. ப்ளா.. ப்ழா..” என்பதைக் கூட கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த ஸ்டிக்கர்
பொட்டு வைத்துக் கொள்ளும் இந்துப் பெண்களின் நடத்தையை சந்தேகிக்கிற சக இந்துக்களைத்தான்
என்ன செய்வதென தெரியவில்லை. ஆனால் இன்று கணவனை இழந்த பல இந்துப் பெண்களை “மூழி மாதிரி
வந்து நிக்காதடீ!!” என்கிற வசவுகளில் இருந்து காப்பது இந்த “கருப்பு ஸ்டிக்கர் பொட்டுகள்”தான்.
நவீனமும் நாகரீகமும்தான் இன்று பல இந்துப் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
பண்பாடு பாரம்பரியம் என்கிற பெயரில் இங்கு மேலும் மேலும் பெண்களை கொச்சைப்படுத்தவும்,
அசிங்கப்படுத்தவுமான நிகழ்வுகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுசரி, பெண்களின்
மாதவிடாய் ரத்தத்தினை தீட்டாகச் சொல்லிக் கொண்டு, கோயிலுக்குள் விடாமல், அங்கே குங்குமத்தை
விநியோகிக்கிற முரண்பாடுதானே இந்து மதம்!!
இந்து
எனும் மதமற்ற மதத்திற்கு இந்த வடிவம் என்றால், அதை பாதுகாத்து வரும் சாதிய பிடிமாணம்
அதையும் விட கேவலம். அப்பா இருக்கும் வரை ஊரின் சாதி சங்கத்திற்கான மாத கட்டணம் செலுத்திவருவோம்.
அப்பாவின் பெயரில் ரசீது வந்துவிடும். அப்பா இறந்த பின், அந்த சங்கத்திற்கு பெண்களின்
பெயரில் ரசீது போடுவதில் கௌரவக் குறைச்சல். அதற்கும் வழக்கமான பண்பாட்டு பாரம்பரிய
காரணத்தைச் சொல்லி, “ஆம்பளை இல்லாத வீடும்மா.. அதனால நீங்க இதை கட்ட வேணாம்” என தவிர்த்தார்கள்.
அதுமுதல் எந்த அறிவிப்புமோ, சாதிச் சங்கம் உண்டுபண்ணிய பள்ளி கல்லூரிகளின் ஆண்டுவிழா
அழைப்பிதழ்கள் வரை எதுவுமே வராமல் தவிர்க்கப்பட்டோம். ஏதோ தனித்துவிடப்பட்டது போன்ற
உணர்வு.
விட்டது
சனியன் என விடாமல், அம்மாவின் ஆழ் மனத்தில், பிறந்தது முதல் ஊன்றி விதைக்கப்பட்ட சாதியப்
பாசம் விடவில்லை. அம்மா செய்து வரும் குடிசைத் தொழிலின் பெயரில் அந்த ரசீதைப் போட சம்மதித்தார்கள்.
அறிவிப்புகளும், அழைப்பிதழ்களும் வரத்துவங்கின. அதாவது, கணவனை இழந்த இந்துப் பெண்ணின்
பெயரை ரசீதில் போடப் போவதில்லை என்கிற சாதியக் கொள்கையே இறுதியில் வென்றது.
இதனை
வாசிக்கும் எனது பள்ளிக் கால நண்பர்கள், (வேறு யாரும் அல்ல இதே சாதியை சார்ந்த நண்பர்கள்)
என்னைக் குறித்து கேள்வி எழுப்பலாம்..
“நீ
ஒன்னாவதுல இருந்து பன்னிரண்டாவது வகுப்பு வரை நம்ம சாதி பள்ளிக்கூடத்துல இலவசமாத்தான
படிச்ச.. கல்லூரில கூட குறைவான கட்டணத்தில தான படிச்ச.. உன்ன படிக்க வச்ச சாதிய பத்தி
இப்போ நீ ஏறுக்குமாறா பேசுவியோ!!: என..
நான்
பள்ளிப்படிப்பு இலவசமாகத்தான் படித்தேன். கல்லூரியில் கூட சலுகை கட்டணத்தில்தான் படித்தேன்.
ஆனால் இந்த சாதியினுடைய பைசாக் காசு கூட எனக்காக செலவு செய்யப்படவில்லை என்பதை என்னால்
உறுதியாகக் கூற முடியும். என்னோடு படித்த சக மாணவ நண்பர்கள், (அவர்களைப் பொருத்தவரை
“வேற்று சாதிக்காரப் பயலுக”) கட்டணம் என்கிற பெயரில் கொட்டிக் கொட்டிக் கொடுத்த காசில்தான்
நான் படித்தேன். என்னை படிக்க வைத்தது எனக்காகவும் கட்டணம் கட்டிய பள்ளி கல்லூரி நண்பர்கள்தான்.
கல்வி வியாபாரிகளுக்கு இதற்கு மேல் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
அப்பா
இருக்கும் போது சொந்த சாதி உறவினர்களின் திருமண நிகழ்வுகளில் அம்மா ஓடி ஆடி வேலை செய்து
கொண்டிருப்பார். தாம்பூலத் தட்டுகள் நிரப்புவது, மணமகன், மணமகள் வரவேற்பின் போது உடனிருப்பது,
அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது என இயங்கியபடி இருப்பார். ஆனால் இப்போதும் ஓடி ஆடி வேலைகள்
செய்கிறார். ஆனால் தாம்பூலத் தட்டுகளை நிரப்புகிற இடத்திலோ, மாப்பிள்ளை - மணப்பெண்
அழைப்பு நேரத்திலோ அம்மா அங்கு இருப்பதில்லை. சில நேரங்களில் “நீ அதைப் பண்ணாத!!” என
தடுத்த சம்பவங்களையும் அம்மாவே என்னிடம் சொல்லி அழுதிருக்கிறார். இவ்வளவு தான் சாதி.
இது தான் சாதி. இருந்தும் அம்மா தன் பிறப்பு முதல் இந்துப் பெண், சாதிப் பெண் இப்படித்தான்
இருக்க வேண்டும் என்கிற கட்டமைப்புகளில் ஊறிப் போயுள்ள காரணத்தால், துடைத்துப் போட்டுவிட்டு
மீண்டும் அதே சாதிக்குள்ளும் மதத்திற்குள்ளும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கிறார்.
இவ்வளவு சம்பவங்களுக்கு பிறகும், அவருக்கு இந்த சாதியில் இருந்தோ இந்த மதத்தில் இருந்தோ
விடுதலை அடைய வேண்டும் என்கிற எண்ணம் கூட துளிர்க்கவில்லை. அவருக்கான சுயமரியாதையை
அவரால் எண்ணிப்பார்க்கக் கூட இயலவில்லை.
ஆனால்
எனக்கு சுயமரியாதையுடன் வாழவே விருப்பம். மீண்டும் இந்த சாதிக்குள் சிக்கி உயிர்விட
சற்றும் விருப்பம் இல்லை. அம்மாவுக்கும் சுயமரியாதையுடன் கூடிய சுதந்திர வாழ்வை எப்படியேனும்
பெற்றுத்தரவேண்டும் என்கிற ஆசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சாதி மத குப்பைகளில்
இருந்து எனக்கும் சேர்த்து விடுதலை பெற்றுத் தருகிற சுயமரியாதை உடைய துணிச்சலான பெண்ணால்
மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும் என நம்புகிறேன்.
அப்பா
தன்னை சாதி வட்டத்திற்குள் பூட்டி வைத்துக் கொண்டதைப் போல என்னால் பூட்டிக் கொள்ள முடியாது. நான் பரிணமித்துவிட்டேன்.
எனக்கு சிறகுகளும் கூட முளைத்துவிட்டன.
பாடுவாசி
11-11-2016
வேற்று சாதிக்காரப் பயலுக”) கட்டணம் என்கிற பெயரில் கொட்டிக் கொட்டிக் கொடுத்த காசில்தான் நான் படித்தேன். என்னை படிக்க வைத்தது எனக்காகவும் கட்டணம் கட்டிய பள்ளி கல்லூரி நண்பர்கள்தான். கல்வி வியாபாரிகளுக்கு இதற்கு மேல் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.... அற்புதம்...
பதிலளிநீக்கு