சனி, 11 மார்ச், 2017

இடுகாட்டுக்குள் ஒரு இலக்கியம் உயிரோடு...

          சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை இதுவரை வாசித்தது இல்லை. பத்தாம் வகுப்பின் தமிழ் பாடத்தில் செய்யுளாக மனப்பாட பகுதியில் அதன் சிறிய பகுதியை படித்ததோடு சரி. ஆனால் சிலப்பதிகாரத்தின் கதை; கதை மாந்தர்கள்; கதைக் களம்; நீதி என அத்துணையும் இங்கு என்னைப் போல அனைவருக்குமே அத்துப்படி. பிறந்தது முதல் சிலப்பதிகாரத்தை வாசித்திராத என்போன்றோரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த கதையின்பால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். கதைசொல்லிகள் சூழ்ந்த இம் மண்ணில் சிலப்பதிகாரம் எனும் இலக்கியக் காப்பியம் மக்களோடு புலங்கிக் கொண்டே இருக்கிறது. கண்ணகி என்கிற பெயரையோ; கோவலன் என்கிற பெயரையோ; மாதவி என்கிற பெயரையோ அறியாதவர்கள் யாருமே இங்கு இல்லை எனலாம். அந்த அளவிற்கு சிலப்பதிகாரம் அனைவரிடமும் கடத்தப்பட்டிருக்கிறது.


          புராணக் கதைகளை ஆளும்வர்கம் காலம் காலமாக தனக்கு சாதகமாக்கி, காய் நகர்த்திக் கொண்டிருக்கிற சூழலில், மக்கள் சமூகம் பல இலக்கியக் கதைகளை தம் வாழ்வியல் நெறியாக தன் வாழ்க்கையோடு பிணைத்து வாழ்கிறது. தன் சந்ததிகளுக்கும் கடத்திவருகிறது. பல்வேறு காலகட்டங்களில் மக்கள் சமுதாயத்தில் நிகழ்ந்த வீரியமான நிகழ்வுகள் நாட்டுப்புறக் கதைகளாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்துள்ளன. இளங்கோவடிகள் இவ்வாறாக மக்களிடம் இருந்து தான் கண்டடைந்த நாட்டுப்புறக் கதைகளுக்கு உயிர்கொடுத்து சிலப்பதிகாரம் எனும் பெயரைச் சூட்டியுள்ளார். மக்களிடம் புழங்கிய இலக்கியம் மீண்டும் மக்களிடமே வந்து சேர்ந்திருக்கிறது. அதனால்தான் இன்றும் சிலப்பதிகாரம் இடுகாட்டுக்குள் கூட உயிரோடு உலாவிக் கொண்டு இருக்கிறது.


          மாதம் ஒரு வரலாற்றுத் தளங்களுக்கு பயணப்பட்டுக்  கொண்டிருக்கும் பசுமைநடையின் 70-வது நிகழ்வு, மதுரையில் உள்ள “கோவலன் பொட்டல்” எனும் இடுகாட்டுக்குள் நிகழ்ந்தது. 05-03-2017 அன்று நிகழ்ந்த பசுமைநடை சிலப்பதிகாரத்தின் தொடர் நிகழ்வாகவே மனதோடு அப்பிக் கொண்டது. இனி சிலப்பதிகாரம் வாசிக்கிற போதோ; கதைசொல்லிகள் மூலமாக கேட்கிறபோதோ இன்றைய பசுமைநடை நினைவுகளும் வந்து போகும்.
இந்த நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான பசுமைநடையின் தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர். சிலப்பதிகாரத்தின் மிக முக்கிய கதைக்களமான கோவலன் கொல்லப்பட்டதாக மக்களால் பேச்சிப் புழக்கில் உள்ள இடத்திற்கு பயணித்தோம். இன்றும் இந்த இடுகாடு மக்களால் கோவலன் பொட்டல் என்றே வழங்கப்பட்டுவருகிறது. மதுரையின் பழங்காநத்தம் பகுதியில் தற்போது புதியதாக முளைத்துள்ள பாலத்திற்கு கீழ் டிவிஎஸ் நகர் செல்லும் பாதையில் உள்ள இடுகாடுதான் இந்த கோவலன் பொட்டல். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா மற்றும் பேராசிரியர் சுந்தர்காளி போன்றோரது உரைகள் பல சந்தேகங்களுக்கான அறிவித் தெளிவாக அமைந்தது.


தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அவர்களின் உரையில் இருந்து:-

          “1981-ல் உலகத்தமிழ் மாநாடு நிகழ்ந்த போது, இந்த கோவலன் பொட்டல் பகுதியை அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மூன்று அகழாய்வுக் குழிகள் மட்டும் அப்போது இடப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடுகள், தாழிகள் போன்றவற்றை காலக்கணிப்பு செய்த போது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்விடப் பகுதியாகவும்; இறந்தவர்களை புதைக்கிற இடுகாடாகவும் இருந்திருப்பதை உறுதிசெய்தோம். இதேபோல தற்சமயம் கீழடியில் செய்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் வயது 2200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை கரிம பகுப்பாய்வு மூலம் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பழங்காநத்தம் என்கிற பெயர் கூட பழங்கால நத்தம் எனும் சொல்லின் திரிபுதான். நத்தம் என்பதற்கு குடியிருப்பு என்பது பொருள். பழங்கால அல்லது பழைய குடியிருப்பு பகுதி என காலம் காலமாக வழங்கிவருகிறோம். எனவே இங்கு மக்கள் பல காலமாக இங்கு வசித்துவருகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. கோவலன் பொட்டல் என்பதற்கான பெயர் காரணம் சிலப்பதிகாரத்தின் தாக்கமாக இருக்குமே தவிர; இங்குதான் கோவலன் கொல்லப்பட்டான் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை.
இங்கு அகழாய்வு செய்த போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்மகனது முழுமையான எழும்புகள் கிடைத்தன. அந்த ஆணின் இடது கை முழங்கையில் இருந்து இல்லாமல் இருந்தது. அவன் ஊனமுற்ற மனிதனா அல்லது கை வெட்டுப்பட்ட மனிதனா என்பது தெரியவில்லை. இது போக மக்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்திய புதிய கற்கால கைக்கோடரி ஒன்றின் சிதைந்த பகுதியும்; மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சங்கப்பாண்டியர் காலச் செப்புக் காசு ஒன்றும்; சில செப்புக்காசுகளும் கிடைத்தன. வரலாற்றில் நெடுங்காலமாக மக்களின் வாழ்விடப்பகுதியாக இப்பகுதி விளங்கியுள்ளதை இங்கு கிடைத்த தொல்பொருட்கள் உறுதிசெய்கின்றன.” என்றார் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா.


அவரைத் தொடர்ந்து, பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் பேசிய போது:-

           “வரலாறு என்பது அங்காங்கே நாம் புழங்குகிற இடங்களில் எல்லாம் புதைந்து கிடக்கிறது. அதுவும் மதுரை போன்ற மிகப் பழைய நகரங்களில் எங்கு நோக்கினும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விசயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாகரீக காலத்தில் நாம் நமது ஓட்டத்தை சற்று நிறுத்தி ஒரு புள்ளியில் நின்று பார்த்தால் அந்த வரலாற்றை உணர முடியும்.


           இங்கு நிகழ்த்தப்பட்ட அகழாய்வே மூன்று அடுக்காக தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. அகழாய்வு குழிகளின் அடிப்பகுதியில் இரும்புக்கால மண் அடுக்கு; அதற்கு மேலே உள்ள அடுக்கு சங்க காலத்தை சேர்ந்த அடுக்கு; அதற்கும் மேலே பாண்டியர் கால செப்புகாசுகள் கிடைத்திருப்பதால் அது இடைக்கால அடுக்கு என அறியப்படுகிறது. இங்கு தாழிகள் கிடைக்கபட்டுள்ளன என்பதை எப்படி பார்க்கிறோம் என்றால், தென் தமிழகத்தில்தான் அதிகமாக தாழிகள் காணக் கிடைக்கின்றன. எனவே இந்த பகுதிகளில்தான் தாழிகளில் புதைக்கிற பழக்கம் இருந்திருக்கிறது. வட தமிழ்நாட்டிலோ மேற்கிலோ கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும் மட்டுமே காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் கற்பதுக்கைகளை தான் அதிக வயதுள்ளதாக கூறிவந்தனர். ஆனால் சமீப கால ஆய்வுகளுக்கு பிறகு தாழிகளில் புதைக்கப்படுகிற பழக்கம்தான் தொன்மையானது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். கற்பதுக்கைகளை நான்கு காலகட்டமாக பார்க்கலாம். பள்ளம் தோண்டி கற்களை அடுக்கி அதற்குள் புதைத்து கற்களால் மூடுவது பழைய பழக்கம். அதன் பிறகு மேல் பரப்பில் கற்களை அடுக்கி புதைத்து அதன்மேல் கற்களை கொண்டு மூடுவது கற்திட்டை முறை. நெடுங்கற்கள் என்று பெரிய அளவிளான கற்களை நடுவது மூன்றாம் கட்டமாகவும் அதில் இருந்து சிறிய கற்களை நடுகற்களாக நடுவதுமாக காலத்தில் மாற்றம் அடைந்து வந்துள்ளன. இவ்வாறு கிமு.1300 ஆண்டில் இருந்து சங்க காலத்தின் இறுதி காலமான கிமு.5-ஆம் நூற்றாண்டு வரை இந்த பெருங்கற்காலச் சின்னங்கள் மாறிவந்துள்ளன.
கோவலன் என்கிற மனிதன் இருந்தானா, சிலப்பதிகாரம் நடந்த சம்பவமா என்று விவாதங்கள் எழுகின்றன. நடந்த ஒரு கதை மெள்ள மெள்ள வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், சிலப்பதிகாரத்தை இளங்கோ எழுதும் முன்னமே மக்கள் மத்தியில் இந்த கதை புழங்கி வந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலேயே ஒரு முளை அருத்த திருமாவுன்னி என்கிற பெண்ணை பார்க்கிறோம். பேகன் என்கிற மன்னனுடைய மனைவி கண்ணகியினுடைய கதையை பார்க்கிறோம்.. அவர்கள இருவரும் பிரிந்து வாழ்ந்த கதையை பார்க்கிறோம். சிலப்பதிகாரத்தின் பதிகத்தை பார்த்தாலே, சேரன் செங்குட்டுவனோடு இளங்கோ காட்டிற்கு செல்கையில் மலைவாழ் மக்கள் அந்த கதையை சொல்வதாகதான் வருகிறது. எனவே இது நிகழ்ந்த சம்பவம் ஒரு மரபுக் கதையாக மக்களிடம் புழங்கிவந்து படிப்படியாக வளர்ந்து தொன்மமாக மாறி பிறகு சிலப்பதிகார காப்பியமாகியிருப்பதாக தான் அறிய முடிகிறது.


          தமிழகம், கேரளா மட்டுமல்லாது, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிங்களர்கள் வாழும் பகுதியிலும் கூட இந்த கதை புழங்கி வருகிறது. இலங்கையில் கண்ணகிக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளன. பல கூத்துகள் பாடல்கள் இந்த கதையில் நிகழ்த்தப்படுகின்றன. பத்தினிதெய்வோ என்று இலங்கையில் மக்கள் கண்ணகியை தெய்வமாக வழிபடுகின்றனர்.”


           இப்படியாக சிலப்பதிகாரம் குறித்து வரலாற்று நோக்கிலும் தொல்லியல் நோக்கிலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு இந்நடையில் அமைந்தது.
நாள்மலர்கள் நூலில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள் அடிகளாரின் அரசியல் என்கிற தலைப்பில் இளங்கோவைக் குறித்து எழுதியுள்ளதை வாசித்த நினைவுகள் மேல் எழுந்தன.


இளங்கோ சிறந்த அரசியல்வாதி என விளக்கி எழுதியுள்ளதில் சில வரிகள்:-

          “இளங்கோ பதவியைத்தான் துறந்தார். அரசியலைத் துறக்கவில்லை. துறக்க அவரால் இயலவில்லை என்பதைச் சிலப்பதிகாரம் நமக்குக் காட்டுகிறது. சிலப்பதிகாரம் கண்டங்களின் பெயர்களைப் பாருங்கள். புகார், மதுரை, வஞ்சி என மூன்றுமே அரசியல் தலைநகரங்களின் பெயர்கள். புகார் நகரிலும் மதுரை நகரிலும் சிலப்பதிகாரக் கதை நடந்தது. எனவே அவற்றிற்கு இட்ட பெயர் சரிதான். கதைப் பாத்திரங்கள் எதுவும் வஞ்சியில் நடமாடவில்லையே? பிறகு ஏன் வஞ்சியின் பெயரால் ஒரு காண்டம் அமைத்தார்? மூன்று அரசியல் தலைநகரங்களின் பெயரும் தன் காப்பியத்தில் வரவேண்டும் என்பது இளங்கோவின் விருப்பம். ஏனென்றால் ஆழ்மனத்தில் இளங்கோ ஒரு அரசியல்வாதி.” என எழுதியிருப்பார்.


           இப்படியாக சிலம்பை படைத்த இளங்கோவையும் நாம் அறிந்து கொண்டு சிலப்பதிகாரத்தை அணுக வேண்டும் என்பதை அறிவு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இந்த பாழாய்ப் போன மனம், காலம் காலமாக மக்களோடு புழங்கி வருகிற கதை இலக்கியத்தை சுற்றியே திரிந்து கொண்டிருக்கிறது. இந்த இடுகாட்டு கொலைக் களத்துக்குள் கோவலனை காவலர்கள் இழுத்துவருவதை சுவரின்றி வரைந்து வரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அவனது தலை துண்டாகிறபோது எழும்பிய அரை நொடி அலரலை காற்றில் செவிகளை தீட்டி தேடிக் கொண்டிருக்கிறது. அவனது குருதி படிந்த குறுமண் துகள் கிடைத்திடாதா என தேடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இது மக்கள் சமூகத்தில் இருந்து பிறந்த கதை. புராணங்களைப் போல இதில் அரசர்களோ நாயகர்களோ கடவுளாக இல்லை; பதிலாக அவர்களே தவறிழைத்தவர்களாகிறார்கள்.. சாமானிய பெண்ணொருத்தியே கடவுளாகிறாள். ஏனெனில் இது மக்கள் கதை.



          சிலப்பதிகார காப்பியம் குறித்தான இந்த பசுமைநடையில் எழுத்தாளர் சி.பன்னீர்செல்வம் ஐயாவின் “தேயிலைப் பூக்கள்” எனும் காப்பியம் வெளியிடப்பட்டது. நான் அறிந்து இடுகாட்டுக்குள் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். “மலையகத் தமிழர்கள் குறித்தான காப்பியத்தை இதைவிட மிகச்சரியான இடத்தில் வைத்து வெளியிட முடியாது” என எழுத்தாளர்.சி.பன்னீர்செல்வம் ஐயா கூறினார். மக்களுடைய இலக்கியங்களால் அந்நாளை அழகாக்கியது பசுமைநடை.


அன்பும் நன்றியும்
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com
paaduvaasi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக