வெள்ளி, 21 ஜூலை, 2017

நாட்டார் வாழ்வியல் கல்வெட்டு

           “தானம் கொடுக்கிற மாட்டை பல்ல பிடிச்சி பார்க்காதே!!” இந்த சொலவடை இன்றும் புழக்கத்தில் உள்ளது. நாட்டுப்புறங்களில் உள்ள மக்கள் துவங்கி, அங்கிருந்து தங்களை பிடுங்கி நகரத்திற்குள் நட்டுக் கொண்ட மனிதர்கள் வரை இந்த சொலவடையை கடக்காமலோ, உச்சரிக்காமலோ இருந்திருக்கமாட்டோம். சாதாரணமாக மக்கள் புழங்கும் சொலவடைகள், கதைகள், நாட்டார் தெய்வங்கள், பண்பாடு, அறிவியல் என அனைத்திலும் வரலாற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன. நாட்டுப்புறங்களில் புழங்கப்படும் வழக்குகள் ஒவ்வொன்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை.

           
           அரச குல கதைகளை மட்டும் புனைவுகளோடும் மிகைப்படுத்தியும் பொன் பொருளுக்காக எழுதித் தொலைத்த புலவர் பெருமகனார்கள் மக்களுக்கான வாழ்வியலை, கதைகளை வரலாறுகளை பெரும்பாலும் எழுதாமலே தவிர்த்துள்ளனர். ஆனால் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய மக்களின் மொழியாலான சொலவடைகள், வழக்குகள் - அவர்களின் வாழ்வியல் வரலாறுகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  “தானம் கொடுக்கிற மாட்டை…” என்கிற சொலவடை போன்றே இன்றைய தலைமுறையிலும் உயிர்ப்போடு நின்றுகொண்டிருக்கிறது மதுரை மாடக்குளம் கண்மாய்க்குள் அந்தக் கல்வெட்டு.

           
           16-07-2017 அன்று பசுமைநடை நிகழ்வு மாடக்குளம் கண்மாய் கல்வெட்டினை அறிந்து கொள்ளும்விதமாக அமைந்தது. மாடக்குளத்தில் பசுமைநடை மூன்றாவது முறையாக நிகழ்கிறது. முதல்முறை இங்கு பயணித்த தாக்கத்தில் எழுதிய பதிவு பசுமைநடையின் “காற்றின் சிற்பங்கள் நூலில் பிரசுரமாகி இருந்தாலும் நான்கு ஆண்டு இடைவெளி வாசிப்பிலும் பயணத்திலும் கற்றதை தொகுத்திடும் வாய்ப்பாக அமைந்தது இந்த நடை.


           பழங்காநத்தம் என்பது பழைய குடியிருப்புகள் என பொருள்படுவது மட்டுமல்லாமல், புதிய குடியிருப்புகளாலும் பெருத்துவிட்டது. குடியிருப்புப் பகுதிகள் ஒரு கட்டத்தில் சட்டென முடிவுக்கு வந்து கண்மாய்க்கரை எழுந்து நின்று வழிவிடுகிறது. நொடிப் பொழுதில் சூழல் மாறிப்போவதை உணர முடிகிறது. கண்மாய்க்கரையில் ஈடடி ஐயனார் கோயிலும் அக்கோயிலின் முன் பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் குதிரைகளும் நின்றிருக்கின்றன. நாட்டுப்புற வாழ்வியலின் மிச்ச சொச்சங்கள் இங்கேயும் கொஞ்சம் சிந்திக்கிடக்கின்றன. பரந்து விரிந்த மாடக்குளம் கண்மாய்க்குள் அந்தக் குத்துக்கல் சிறு துரும்பை போலதான் நின்று கொண்டிருக்கிறது. பசுமைநடையின் தகப்பன் சாந்தலிங்கம் ஐயா அவர்கள் அந்த கல்வெட்டுகளை வாசித்துக் காட்டி, அதன் வரலாற்று பின்புலங்களை விவரித்தார். அவரோடு வந்திருந்த வரலாறு தொல்லியல் துறை மாணவர்கள், அந்த கல்வெட்டுகளை படி எடுக்கும் விதத்தை செய்முறையாக நிகழ்த்திக் காட்டினர்.


           அந்தக் கல்வெட்டை அவர்கள் தூய்மை செய்து நீரூற்றி கழுவினர். அதன் மேல் விரிக்கப்பட்ட வெள்ளை நிற ஈரக் காகிதத்தின் அழுத்தத்தால் உண்டான மேடு பள்ளங்களில் கருப்பு சாந்தை ஒத்தி எடுக்கையில் 12-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தைய வரலாறுகள் முதற்கொண்டு உரத்த குரலில் கண்மாய் முழுவதும் எதிரொலிக்கத் துவங்கியது.


 
          கல்வெட்டுக்கு வயது 800 முதல் 900 ஆண்டுகள். அந்தக் கல்லுக்கான வயது பல கோடி ஆண்டுகள். பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அந்தப் பூமியில் கல்லுக்கும் மண்ணுக்கும் அதே வயதுதான் இருக்க வேண்டும். இந்தக் குத்துக்கல்லும் இது போன்ற மலைப் பாறையின் சிறு துகள்தான். கல்லை பயன்படுத்த துவங்கிய (கற்கால) மனிதனுக்கான வயது 20 – 30 லட்சம் ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. ஏறத்தாழ 449 கோடியே 70 லட்சம் ஆண்டுகளாக இந்தப் பாறைகளும் கற்களும் மனித இனத்திற்கு முன் தோன்றி / அழிந்து போன உயிர்களால் பயன்படுத்தப்படாமலே இருந்தது என்பதை ஏற்க இயலாது. தினவெடுத்தால் சொரிவதற்கும், பாறை இடுக்குகளில் முட்டை இட்டு குஞ்சு பொரிப்பதற்கும், குட்டி தரிப்பதற்கும், தலைகீழாக தொங்கிக் கொண்டு பாலூட்டும் பறவைக்கும் என பல உயிருக்கும் பாறைகள் பயன்பட்டுதான் வந்துள்ளன. ஆனால் முதன் முதலாக அந்த பறையை உடைத்து, கற்களை கூராக்கி பயன்படுத்த துவங்கிய உயிர் மனித இனத்தில்தான் வந்துள்ளது. அதன் நீட்சியோ என்னவோ கிரானைட் கொள்ளை வரை இன்று கோரமாக வளர்ந்து நிற்கிறது.


           பண்பாட்டு ஆய்வாளர்.தொ.பரமசிவம் அவர்கள், வீட்டில் நாம் புழங்கும் அம்மி ஆட்டுக்கல் முதலானவை கூட கற்கால மனித வாழ்வியலின் நீட்சி என்கிறார். இன்றும் தொல்லியல் ஆய்வாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுவது கல் ஆயுதமும், மண் பாண்டங்களும்தான். ஏனென்றால் இவை மனிதனுடைய சிந்தனையின் வயதோடு ஒத்துப்போகின்றன. கற்களை பயன்படுத்த துவங்கி சிந்திக்க ஆரம்பித்த மனிதன், அதே கற்களை கடவுளாக்கி தனது சிந்தனையை நிறுத்திக் கொள்வதுதான் வேதனையானது.


          அந்த கற்சிலைகளில் இருந்தும் சிந்திக்கத் துவக்கி தேடலை விதைக்க வேண்டியுள்ளது. தென்னகத்தில் கற்கோயில்களின் துவக்கம் கிபி. 7 முதல் 8-ஆம் நூற்றாண்டு என கணக்கிடப்படுகிறது. அதற்கு முன் வரை உருவ வழிபாடுகள் இருந்திருப்பது ஐயப்பாடுதான். ஆனால் கிமு. 1-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கற்திட்டைகள் கற்படுக்கைகள் போன்றவை வழிபடப்பட்டு வந்திருக்கின்றன. அங்கிருந்தவர்கள் இறந்த தம் இனத்தவர்களது உடலை அடக்கம் செய்து வழிபட்டுள்ளனர். கற்களை வழிபடுகிற இந்தப் பழக்கம் நடுகல் வழிபாடாக வந்ததாகவே இருக்க வேண்டும். இதுவரை பசுமைநடையுடன் கடந்து வந்த சமண தொல்லெச்சங்களில் கற்படுக்கைகள் மற்றும் அதில் செதுக்கப்பட்டுள்ள தமிழி எழுத்துக்கள் கிமு.3-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. கிபி.9-ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே சமணர்களும் உருவ வழிபாடுகளை துவங்குகின்றனர்.  வைதீகம் கிபி. 7 முதல் 8-ஆம் நூற்றாண்டுகளில் கற்கோயில்களை துவக்குகிறது. இப்படியான வைதீக கோயில்களும் கோபுரங்களும் மனிதர்களை சாதிகளாக பிரித்து, ஒவ்வொரு வீதியிலும் ஒரு சாதியை நிறுத்தியது. சமண குடைவரைகள் கிபி.8-ஆம் நூற்றாண்டுகளில் துவங்கியிருப்பதையும் காண முடிகிறது.


           இப்படி அரசகுலங்களும் ஆண்ட பரம்பரைகளும் சமயத்திற்கு தகுந்தாற்போல சமயத்தை மாற்றிக் கொண்டு அந்தந்தக் கோயில்களின் கட்டுமானங்களில் மக்களின் வரிப் பணத்தை செலவழித்துக் கொண்டே இருந்திருக்கின்றன. ஆனால் நாட்டுப்புறங்களில் வேளாண் குடிகள் உழவு செய்தால்தான் உணவு என்று வாழ்ந்துள்ளனர். அவர்களை அநேக மதங்கள் சென்று சேரவில்லை என்பது, இன்றும் அவர்களிடம் நாட்டார் தெய்வ வழிபாடுகள் இருப்பதே சான்று. அரசர்களை தாஜா செய்த வைதீக மதங்கள் மக்களிடம் அனுகவே இல்லை என்பதும் வெளிப்பாடு. ஆனால் அரசர்களது நலனுக்கும் அவர்களது குடும்ப மேன்னைக்கும், அரசதிகார இடையூறுகளை தவிர்க்கவும் வேத யாகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவ்வாறு யாகங்களை வேள்விகளை நிகழ்த்தும் பார்ப்பன புரோகிதர்களுக்கு ஆண்டைகளால், வேளாண் மக்களின் சிற்றூர்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. கிராமம் கிரமமாக வேளாண் குடிகள் பார்ப்பன கட்டுப்பாட்டுக்குள்ளும், சில பகுதிகளில் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுமுள்ளன. வேள்விக்குடி, சதுர்வேதிமங்களம் என்கிற பெயர்களில் தமிழகத்தில் மட்டும் 400 பிரம்மதேய கிராமங்கள் வரை இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் ஐயாவின் தொடர்ச்சியான உரைகள் எடுத்துரைக்கின்றன.


           ஆண்டைகளின் சுக போகத்திற்கான யாகங்களுக்கு மக்களின் மீது வரி திணிப்பதையும், அந்த யாகங்களுக்கு வேளாண்குடிகளின் வேளாண் நிலங்கள் அரசனால் தாரைவார்க்கப்படுவதையும் எதிர்த்து அநேக இடங்களில் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியான கிளர்ச்சி அமைப்பு ஒன்று இந்த மாடக்குளம் கண்மாய் சார்ந்த வேளாண் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வரலாற்று முக்கியத்துவமான கல்வெட்டை நோக்கிதான் பசுமைநடையின் 75-வது நிகழ்வு அமைந்தது.


           அந்த குத்துக்கல் மீதான 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மேற்பகுதியில் குடை, இரண்டு பக்கமும் சாமரம், குத்துவிளக்கு, மற்றும் விவசாயக் கருவிகளான அரிவாள், கலப்பை சின்னங்கள் காணப்படுகின்றன. “சித்திரமேலி பெரியநாட்டார்” என்கிற அமைப்பை இப்பகுதி மக்கள் நிருவியுள்ளனர். சித்திரமேலி என்பது அழகிய வேலைப்பாடு கொண்ட கலப்பை என்பது பொருள். கலப்பையை சின்னமாக கொண்ட அவர்களது வேளாண் அமைப்பும், வணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர். அந்தச் சின்னங்களின் கீழே,

“இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்”

என்ற கல்வெட்டு செய்தியும் உள்ளது. எரிவீரகணத்தான் என்பது திசையாயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவின் படை அமைப்பிலுள்ள வீரர்களைக் குறிக்கிறது.
அந்தக் கல்வெட்டு செய்திக்கு கீழே, அழகாக யானை ஒன்றின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த மாடக்குளம் கண்மாய் கரையில் உள்ள ஈடடி ஐயனார் என்கிற நாட்டுப்புற தெய்வத்தின் கோயிலில் மக்களது வழிபாட்டிலும் யானை மீது படைவீரனின் உருவம் வணக்கத்திற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


           இன்று GST வரி விதிப்பு, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங்குளம் என தொடர்ச்சியான அரசதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களின் நீட்சி எண்திசை நாட்டு எரிவீரகணத்தானிலும் அதற்கு முன்பிருந்தும் துவங்கியிருக்கிறது.


           அதே போல பார்ப்பன எதிர்ப்பு என்பதையும் சித்திரமேலி பெரியநாட்டாரும் அதற்கு முன்பிருந்த நாட்டுப்புற மக்களும் துவக்கி வைத்துள்ளனர். “தானம் கொடுக்கிற மாட்டை பல்லை பிடித்து பார்க்காதே!!” என நாட்டுப்புற மக்கள் கோபத்தில் பயன்படுத்தும் சொலவடை கூட பார்ப்பன எதிர்ப்பாகவே பார்க்கிறேன். ஏனென்றால் வரலாற்றில் மாட்டை தானம் என்கிற பெயரில் அபகரித்துக் கொண்டிருந்தவர்கள் யார் என்பது வரலாற்றை கற்றவர்களுக்கு தெரிந்திருக்கும். சமீபத்தில் ரங்கராஜ பாண்டே என்கிற செய்தியாளர் கூட, “பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி” என்று தந்தை பெரியார்தான் முதலில் கூறினார் என வம்பு செய்தார். ஆனால் தந்தை பெரியார், நாட்டுப்புற மக்கள் புழங்கிவந்த அந்த சொலவடையை மேற்கோள்தான் காட்டினார் என்பதுதான் உண்மை. கடவுள் மறுப்பை பேசும் போது பெரியாரை எதிர்த்த குரல்கள் கூட, அவர் பார்ப்பன எதிர்ப்பை பேசுகிற போது அமைதியாகின. ஏனென்றால், பெரியார் பேசிய பார்ப்பன எதிர்ப்பு நாட்டுப்புற மக்களின் மொழி, அது அவர்களின் ஆயிரம் ஆண்டுகால வலி. அதைத்தான் தந்தை பெரியார் பேசினார்.


           காலம் கடந்தும் அந்த குத்துக்கல் கல்வெட்டு இன்னும் வரவிருக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டேதான் இருக்கும். சில மனிதர்களைப் போல சில கற்களும் தன் காலம் கடந்தும் வரலாற்றிலும் எதிர்காலத்திலும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன.

அன்பும் நன்றியும்
ரகுநாத்
paaduvaasi@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக