ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சாராய குடிக்கி புள்ளையாரு

“சாராயத்த ஊத்தி கருப்பனுக்கு வையிங்கடான, எழவெடுத்த மவனுக நேத்து வந்த புள்ளயாருக்கு வச்சிருக்கானுக!! அவென் குடிச்ச எச்சைய குடிக்க எங் கருப்பென் என்ன தொன்னாந்து போயா நிக்கிறான்!!??”

குலதெய்வம் கும்புட ஆரம்பிக்கிறப்பலாம் இந்த கன்னியப்பென் தண்ணிய போட்டுட்டு ஏதாவது ஏழரைய இழுக்க ஆரம்பிச்சிடுறான்

“ஏழேய்!! நான்தான் சொல்லீட்டேன்லடா.. தெரியாம அங்க வச்சிட்டாங்கனு. கருப்பனுக்கு வேற சரக்கு வாங்கி ஊத்தி வச்சிடுவோம்டா கன்னியப்பா.. பிரச்சனை பண்ணாம வீட்டுக்கு போடா. யோவ்.. கொஞ்சமாவது வெவரம் வேணாமாயா.. எத எங்க படைக்கிறதுனு!?”

பூசாரி கொஞ்சம் பக்குவமா சொன்னதும், அப்போதைக்கு அமைதியாகிட்டான். இல்லனா இனியாரம் யாரும் பதில் பேச முடியாத அளவுக்கு கேள்வியும் வசவுமா தூள் பறக்கும். கோயில் மேட்டுல நின்னுக்கிட்டு இருந்த கூட்டம் முழுக்க கன்னியப்பன் அடுத்து என்ன பண்ண போறயான்னு பாத்துகிட்டே நின்னுச்சி.


“இந்தா!! நீ வா மொதல்ல.. உனைய கட்டிக்கிட்ட நாளுல இருந்து ஒரு நல்ல நாளு பொல்ல நாளுக்கு நிம்மதியா இருக்க விடுறியா!? வீட்டுக்கு வா மொதல்ல..”

கையபிடிச்சி வம்படியா இழுத்தா சாந்தா. அவள திரும்பி ஒரு மொற மொறச்சான். அவ கண்ணு கலங்கிப் போயி நின்னுகிட்டிருந்தா. அவளோட கைய உதறிவிட்டுட்டு கோயில் மேட்டு திண்ணையிலயே உக்கார்ந்துகிட்டான். அதுக்கப்பறம் அவ மொகத்த அவென் பாக்கவே இல்ல.

“குடிச்சிப்புட்டு சலம்பல் பண்றதே இந்தாளுக்கு வழக்கா போச்சி”

கோயில் மேட்டுல நின்ன கூட்டம் தனக்குத்தானே பேசிக்கிட்டு, அது அது வேலைய பார்க்க கலஞ்சிடுச்சி. அந்த கூட்டத்துக்குள்ள இதையெல்லாம் பாத்துக்கிட்டும் கேட்டுகிட்டும் இருந்த குணசேகரு தலைய குனிஞ்சமானிக்கயே வீட்டுக்கு வந்துட்டான்.

“சித்தப்பாகிட்ட எத்தனையோ தடவ சொல்லியாச்சி. தண்ணிய போடாம பேசுங்கன்னு. மனுசென் கேக்கவே மாட்டேங்குறாரு. அவரு பேசுற விசயம் எல்லாமே குடிகாரென் பேச்சுனு சாராய நெடி மாதிரி காத்தோட கரைஞ்சி போய்டுது.”

புலம்பிக்கிட்டான் குணசேகரு.

குணசேகரு சின்னதா இருந்தப்பல இருந்து கன்னியப்பன பாத்துகிட்டு இருக்கான். நிறைய தடவ அவன் போடுற சத்தத்த கேட்டு பயந்தும் போயிருக்கான். யாரு இந்த மனுசென்.. ஏன் எப்ப பார்த்தாலும் சண்ட போட்ட மனியமாவே இருக்காருனு இவனுக்கு புரியாது. குணசேகரோட அப்பா செத்தப்போ,

“எங்கண்ணனுக்கு நான்தான்டா எல்லாமே பார்ப்பேன்!!”னு சொல்லிகிட்டு இழுத்து போட்டு எல்லா வேலையும் பார்த்தான் கன்னியப்பன். அப்பல இருந்துதான் கன்னியப்பன் கூட சித்தப்பா சித்தப்பானு பேச ஆரம்பிச்சான் குணசேகரு. அவன பத்தி கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சிகிட்டான்.

கன்னியப்பனுக்கு இதுதான் வேலைனு கெடையாது. கெடைச்ச வேலைக்கி போவான். சமையல் வேலை, வெள்ளையடிக்கிற வேலை, கொஞ்ச நாள் கட்டட வேலைக்கு கூட போய்க்கிட்டு இருந்தான். எந்த வேலையா இருந்தாலும் அரையுங்குறையுமா இல்லாம முழு மனசோட நேர்த்தியா செய்வான். குலதெய்வந்தான் அவனுக்கு எல்லாமே. எந்த பெரிய கோயில் துநீரையும் வாங்கி பூசிக்க மாட்டான். அதே சமயம் வானம் பாத்த சாமியா எந்த கல்லு எங்க நின்னாலும் கன்னத்துல போட்டுக்காம கடக்கமாட்டான்.

“ஏழேய் மவனே, அந்த காலத்துல இருந்த சனத்தொகையில இப்பிடி செத்து கல்லாகிப் போயி நிக்கிற சாமிகளும் நம்ம சனத்தோட ஒன்னாதான்டா பொழங்கியிருக்குங்க!! நாமதான் மல்லுக்கட்டிகிட்டு கெடக்கோம்”

அவென் எது பேசுனாலும் ஆயிரம் அர்த்தம் இருக்குற மாதிரியே இருக்கும். குணசேகரு, “உம்” கொட்டிக்கிட்டு கேட்டிக்கிட்டிருப்பான்.

கோயில் மேட்டு பந்தல்கால்ல, ராத்திரி வெட்டுக்காக வந்திருந்த ஆட்டுக்கெடாக்கள கொண்டுவந்து ஒவ்வொன்னா கெட்டிப் போட்டானுக எளவட்டங்க. பந்திக்கு வெட்டி மீந்து போன வாழை இலைகள சின்னப்புள்ளைக அந்த கெடாக்களுக்கு திங்கக் குடுத்து விளையாடிகிட்டு இருந்ததுக. கருப்பனுக்கு முன்னாடி புதுசா வாங்கீட்டுவந்த சாராயத்த ஊத்திவச்சத பார்த்துட்டுதான், கோயில் மேட்டுல இருந்து எந்திரிச்சி வீட்டுக்கு போனான் கன்னியப்பன். பூசாரி கண்ணுல சாடை காட்டுனதும் ரெண்டு பேரு கன்னியப்பன் பின்னாடியே போனானுக.

கோயிலுக்குள்ளயும் வெளியிலயுமா எதுக்கு நடக்குறாங்கனே தெரியாம போகவும் வரவுமா வேலை பார்த்துகிட்டு இருந்தாங்க நிர்வாக கமிட்டிகாரவுங்க. கொஞ்ச நேரத்துலயே குடுமி வச்ச ரெண்டு பேரு தெருவுக்குள்ள வந்து நேரா கோயிலுக்குள்ள நுழைஞ்சாங்க. யாரோட மொக சாடையும் இல்லா செவப்பா இருந்த அவுங்கள பார்த்துட்டு குணசேகருகிட்ட ஓடியாந்து விசயத்த சொன்னான் ஆனந்து.

“அப்பிடியா.. கன்னியப்பன் சித்தப்பாவ எங்கடா!!?? அவரு அவுங்கள பார்த்தாரா!?” பதறிப் போயி கேட்டான்.

“தெரியல அண்ணே. அவர கோயில் மேட்டுலயும் காணலயே!!”

“சரி வா!!”

ரெண்டு பேரும் கன்னியப்பன தேடி கிளம்புனானுக. கன்னியப்பன் முறட்டுத்தனமான கோபக்கார ஆளு. ஆனா குணசேகருகிட்ட பேசும் போது என்னவோ நல்லவிதமாதான் பேசுவான்.

“ஏன்டா மவனே.. நம்ம பழைய கோயிலு உனக்கு ஞாபகம் இருக்காடா!! எப்படி இருந்ததுனு தெரியுமா.. உள்ள என்னலாம் இருந்ததுனு நெனவு இருக்கா!!”

இந்த வழக்கமான கேள்வியோட ஆரம்பிக்குற பேச்சு நேரம் போறதே தெரியாம ஓடிக்கிட்டே இருக்கும்.

“இருபத்தாறு வருசத்துக்கு முந்தி மோத தடவயா கும்பாபிசேகம்னு பண்ணானுக.. எல்லாத்தயும் மாத்திப்புட்டானுக. அப்பலாம் நம்ம கோயிலுக்கு கூரையும் கெடையாது வேலியும் கெடையாது. காத்து, மழை, வெயில்னு சொதந்திரமா இருந்த சாமிய நாலு செவத்துக்குள்ள போட்டு அடச்சிட்டானுக. துடியான சாமியோட சத்தியப் பூரம் ஒன்னுமில்லாம பண்ணீட்டானுக.”

“இல்ல சித்தப்பா அது ஏதோ இடிதாங்கினு…”

“நம்ம ஊரு சினிமா தேட்டருல கூடதான்டா மவனே இடிதாங்கி வச்சிருக்கான். தேவைனா அப்பிடி ஒன்ன மாட்டிவிட வேண்டியது தான, கும்பத்த எதுக்கு வைக்கெனும்!!?”

“ அது மட்டுமில்ல சித்தப்பா.. அதுக்குள்ள விதையெல்லாம் பாதுகாப்பாங்கனு சொல்லுவாங்க!!”

“இங்க எவென் விவசாயம் பாக்குறான்!! சரி நீ சொல்ற படியே கேக்குறேன். எனக்கு அந்த வெதைய எடுத்து நட்டு விவசாயம் பண்ணனும்னு கேக்குறேன். எவனாவது எடுத்து தருவானா!!?? சொல்லுடா மவனே!”

பதில் தெரியாத கேள்வியா கேட்டுக்கிட்டே போவாரு. மொத கும்பாபிசேகம் குணசேகருக்கு அவ்வளவா ஞாபகம் இல்ல. ஆனாலும் கன்னியப்பன் அன்னிக்கி விட்ட சத்தம் இன்னும் இவென் காதுக்குள்ள விழுந்துகிட்டேதான் இருக்கு.

“ஏய்.. ஈத்தரப் பயலுகளா!! இங்க பொறந்த பொம்பளப் புள்ளைகள, கல்யாணம் கட்டிக்குடுத்துட்டா வேற வீட்டுப் புள்ளயாகிடுச்சினு வியாக்யானம் பேசி கோயிலுக்குள்ள விட மாட்டேங்குறீங்க.. பாவப்பட்ட சனங்க, ஒரு வாய் பொங்கச் சோத்துக்கு ஒங்ககிட்ட வந்து நின்னா கோயிலுக்குள்ள விடாம வாசலோட திரும்பி பாக்காம அனுப்புரீங்க.. ஆனா இந்த சாமியாருப்பயலுகள மட்டும் கோயிலுக்கு உள்ளவரைக்கும் விடுறீங்களே.. என்னாங்கடா சமாச்சாரம்!!? நீங்கலாம் மனுசனுகதானா!! இல்ல வேற எதும் ஈனப் பொறப்பா!!”

வார்த்தைகள்லாம் தடிச்சிதான் விழும். ஆனால் எல்லாமே நியாயமான கேள்வியாதான் இருக்கும்.

“சாமிமாருங்க வந்துட்டாங்க.. நம்ம பங்காளிங்க கோயிலுக்கு வேகமா வாங்க!! கணபதி பூசை இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பமாகிடும். அப்பறம் தலக்கட்டு வரி கட்டி நம்ம காரியதரசிகிட்ட ரசீத வாங்கிக்கோங்க!!”

கோயில் மைக் செட்டுல இருந்து அறிவிப்பு வந்துகிட்டே இருந்துச்சி. அங்கங்க நின்னுக்கிட்டு வெட்டிக் கதை பேசிக்கிட்டிருந்த எல்லாரும் கோயிலுக்கு நகர ஆரம்பிச்சாங்க. கோயிலுக்குள்ள இடம் போதுமான அளவு இல்லாததால வெளியிலயும் கூட்டம் அதிகமா இருந்தது.

“சித்தப்பாவும் இத கேட்டிருப்பாரு.. வாடா எப்பிடியும் கோயில் முன்னாடி வந்திடுவாரு. நாமளும் போயிடுவோம்.”

கோயில் மேட்டுக்கு வந்த ரெண்டு பேரும் அந்த கூட்டத்துக்குள்ள கன்னியப்பன தேடிக்கிட்டேதான் திரிஞ்சானுக. குடுமி வச்ச சாமியாருங்க கணபதி பூஜைய ஆரம்பிச்சிட்டானுங்க. புள்ளையார் சிலைக்கு பக்கத்துல இன்னும் எடுக்காம இருந்த நிறை சொம்பு சாராயத்த தண்ணீனு நினச்சி நீருளாவிட்டானுக. சுத்தி நின்னதுல நாலு பேரு பார்த்துட்டு கவனிக்காத மாதிரி தலைய கவுந்துகிட்டானுக. ஏதேதோ புரியாத வார்த்தையா உச்சரிச்சிகிற சத்தம் கோயில் மைக் செட்டுல கேட்டுகிட்டே இருந்துச்சி. எல்லாரையும் கெட்ட வார்த்தையில திட்டுற மாதிரியே தெரிஞ்சது.

“இதுக்கு நம்ம கன்னியப்பன் சித்தப்பா பரவாயில்ல ணே.. புரியிற கெட்டவார்த்தையிலயாவது திட்டுவாரு..”னு முனுமுனுத்துக்கிட்டான் ஆனந்து. எங்க தேடிப் பாத்தும் கன்னியப்பன் கிடைக்காதனால அவனுக்கு எதும் பதில் சொல்லாம, யோசனையில இருந்தான் குணசேகரு.

இந்த புள்ளையாரு சிலைய ரெண்டு வருசத்துக்கு முந்தி நடந்த கும்பாபிசேகத்தப்பதான் இங்க வச்சானுக. குட்டியானை வண்டியில பாடை கட்டுனா மாதிரி பூமாலையால அலங்காரம் பண்ணி கோலாகலமா கொண்டு வந்தானுக. பிணம் போன பாதையில விழுந்துகிடக்குறது போல பாதை முழுசும் பூவா கிடந்தது. அப்பவும் இதே மாதிரிதான் கன்னியப்பன ஆளக் காணம். ஆனா வேலை முடிச்சி அன்னிக்கி சாயங்காலம் அவென் வந்ததும், தெருவே அல்லோகல்லோலப்பட்டு போச்சி.

“ஏன்டா முட்டாப் பயலுகளா.. எதுக்குடா இப்ப இங்க புள்ளையாரு சிலைய கொண்டுவந்து வச்சிருக்கீங்க!!??” முதல் சத்தத்திலேயே கோயில் முன்னால கூட்டம் கூடிடுச்சி.

“டேய்.. நீ தேவையில்லாம பிரச்சனை பண்ற.. விவரம் தெரியலனா பேசாம போய்டு.. பஞ்சாயத்து பண்ணாத!”


“என்னாடா எனக்கு வெவரம் தெரியாது.. அப்பிடி உனக்கு தெரிஞ்ச வெவரத்த சொல்லேன் கேட்டுக்குறேன்”

“ஏழேய்.. நம்ம ஆத்தியப்பென் சாமி, பெருமாளோட அவதாரமுடா. பெருமாளோட மருமகென் புள்ளயாரு.. அதுனால அந்த சாமி இங்கதான்டா இருக்கும். உனக்கு என்னடா பிரச்சனை!!?”

“ஏய் பெருசு.. வாயா.. வாயா… வா.. வா.. உனையத்தேன் தேடிக்கிட்டிருந்தேன். யோவ். ஆத்தியப்பென் என் பாட்டென். பெருமாள் கிட்ட போயி படுத்துதான் ஆத்தியப்பன அவென் ஆத்தா பெத்து போட்டுச்சினு சொல்லுறியா அப்பிடினா!!??”

“…!!??..”

“என்னயா பெருசு முழிக்கிற!! பேசு.. எவென், எவனோட அவதாரமுயா!? ஆத்தியப்பனும், கருப்பனும் நாகாத்தாளும் இந்த சனங்கள பெத்துப் போட்டு சாமியாகிப் போனவுக.. ஒனக்கும் எனக்கும் இருக்குற உடம்பும் உசுரும் நமக்கு முன்னாடி பெறந்து இருந்தவனுக விட்டுட்டு போனது. எத எதோட முடிச்சி போடுற!!??”

“இன்னிக்கி புள்ளையார கொண்டுவந்து வப்ப.. நாளைக்கி சதுர்த்தி, கொழுக்கட்ட அவிக்கனும்ப.. அடுத்து, புள்ளயாரு நெய் சோத்த தான் திங்கும் நீயும் நெய் சோத்ததான் திங்கனும்ப.. கடைசில, இங்க நீ பூசாரியா இருக்க முடியாதுனு சாமியார் பயலுகள கொண்டாந்து உள்ள நிப்பாட்டுவ.. நம்ம புள்ளைக பெத்தவென் பேரும் பாட்டேன் பேரும் தெரியாம நக்கிக்கிட்டு திரியுங்க!!”

வாய் சண்டை வளுத்து கைகலப்பில் முடிஞ்சது. வழக்கம் போல சாந்தா அழுது கதறிக்கிட்டு கன்னியப்பன் கையை பிடிச்சி வீட்டுக்கு இழுத்துட்டு போனாள்.

கணபதி பூசையும் முடிஞ்சி தட்சணைகளோடு சாமியாருகளும் கிளம்பியிருந்தானுக. கோயில் முன்னாடி நின்னுகிட்டு இருந்த ஆட்டுக் கிடாக்கள்லாம் ஒவ்வொன்னும் மூஞ்ச பாத்து “மே.. மே..”னு கத்திகிட்டே இருந்திச்சிக..

கன்னியப்பன தேடி, கிடைக்காம இனி அம்புட்டுதான்னு ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து உக்காந்துட்டானுக.

“தெருவுக்கு வெளியில கழுமரம் இருக்கே அங்க எதும் உக்காந்துருக்காரானு பாக்கலாமா ணே!!”

“தண்ணியப் போட்டிருந்தா அந்த நாளு முழுசும் கழுமரம் பக்கமே போகமாட்டாருடா அவரு.”

ரொம்ப நேரம் வரையும் பேசிக்கிடே இருந்தனுக.. இருட்ட துவங்கிடுச்சி. பெரிய பெரிய லைட்டுகளோட வெளிச்சம் பகல் மாதிரி காட்டிக்கிட்டு இருந்துச்சி. திடீர்னு கோயில் பக்கத்துல இருந்து ஒரே சத்தம். இவனுக அங்க போறதுக்குள்ள சத்தம் இவனுககிட்ட வந்துடுச்சி.

“ஏன்டா எனக்கு தண்ணிய ஊத்தி படுக்கப்போட்டுட்டு, இங்க கண்டவனையெல்லாம் உள்ள விட்டுருக்கீங்க!! ஏன்டா எனைய உக்கார வச்சிகிட்டு அவன நீ உள்ள விட்டுருந்தா உன்ன தைரியமான ஆளுனு ஒத்துக்கிவேன். பூசாரித்தனத்த பாருடானா அதை எவென்கிட்டயோ தார வார்த்துட்டு எனக்கு ஊத்திக்குடுத்திருக்கியே நீயெல்லாம் என்ன பூசாரியா!!”

“கன்னியப்பன் சித்தப்பாவேதான் டா!! வா வா வேகமா வா!!”

பூசாரியை பேசியதும் கூட்டம் கன்னியப்பனை நோக்கி சத்தம் போடத் துவங்கியது.

“ஏய் என்னப்பா உன் அலும்புக்கு அளவில்லையா.. பூசாரிய இந்த பேச்சி பேசுற!!”

சப்போட்டுக்கு ஆள் கெடைச்ச மெதப்புல பூசாரி நாடகமாட ஆரம்பிச்சிட்டான்.

“பாருங்கையா என்னையே எப்பிடி ஏசுறான்னு..”

 “ஏய்..”ங்குற ஒரு சத்தத்துல எல்லாரோட சத்தத்தையும் அடக்குனான் கன்னியப்பன்.

“மூத்த வகையறா தானடா பூசாரியா இருக்கனும்னு வச்சிருக்கோம். ஏன் பெரியப்போய் உம் பையன பெத்து போடுறதுக்கு முந்தி அந்த சாமியார் பயலுகள எதும் பெத்து போட்டுட்டியா நீயி!!? இவன்தான பூசாரி. இவன பேசுனதுக்கு எங்கிட்ட பொங்கிகிட்டு வாரீங்களே!! வெளியில இருந்து வந்த சாமியாருப்பய இங்க வந்து பூசை போட்டத, இவனோட சேந்து நின்னு நீங்க எல்லாரும் தான வேடிக்கை பாத்துகிட்டு இருந்திருக்கீங்க!!”

கன்னியப்பன் கேள்விக்கி யாருகிட்டயும் பதில் இல்ல. இங்க யாருமே குடிச்சிருக்காத மாதிரி, வழக்கம் போல கன்னியப்பன குடிகாரன் பேசுறான்னுதான் பாத்தானுக. புள்ளையாரு பக்கத்துல நீருளாவுன சாராயம் பாதி குறைஞ்சி இருந்தது. அத கவனிச்ச கன்னியப்பன்,


“ஏழேய்.. இங்க பாருங்கடா.. இது பால் குடிக்கிற புள்ளையாரு இல்லடா.. சாராயம் குடிக்கிற புள்ளையாருடா.. பாதி சரக்க காணோம்..” என சிரிச்சிகிட்டே கத்தினான். அப்போ இருந்த அமைதியில “மே.. மே..”னு ஆட்டுக்கிடா கத்துற சத்தம் நக்கலா சிரிக்கிற மாதிரியே இருந்துச்சி. குணசேகரும் ஆனந்தும் அடக்க முடியாம சத்தமா சிரிச்சிட்டானுக. கன்னியப்பன மட்டும் பார்த்துகிட்டு நின்ன கூட்டம் திரும்பி இவனுகளயும் பார்க்க ஆரம்பிச்சிடுச்சி.


-பாடுவாசி
04-09-2016
thamizhmani2012@gmail.com
paaduvaasi@gmail.com

1 கருத்து: